Published : 25 Feb 2021 22:25 pm

Updated : 25 Feb 2021 22:26 pm

 

Published : 25 Feb 2021 10:25 PM
Last Updated : 25 Feb 2021 10:26 PM

அக்ஸர், அஸ்வின் ராஜ்ஜியம்: 3-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பிரமாண்ட வெற்றி: இங்கி.வெளியேறியது: ஆடுகளம் ஆய்வா?

the-axar-ashwin-show-india-hammers-england-in-day-night-test-inside-two-days
அகமதாபாத் டெஸ்டில் ஹீரோவாக ஜொலித்த இந்திய வீரர்கள் ரவிச்சந்திரஅஸ்வின், அக்ஸர் படேல்: படம் உதவி ட்விட்டர்

அகமதாபாத்


அக்ஸர் படேல், அஸ்வினின் பிரம்மிப்புக்குரிய பந்துவீச்சால், அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியவுடனே இந்த போட்டி 3 நாட்களைத் தாண்டுவது கடினம், 250 ரன்கள் அடித்தாலே பெரிய விஷயம் என்று தொடர்ந்து கூறிவந்தோம் அது நடந்துவிட்டது.


இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிச் சுற்றில் இந்திய அணி முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேநேரத்தில் பைனலுக்கு செல்லும் வாய்ப்பிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.

அதேநேரத்தில் "எனக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு 2 கண்ணும் போகணும்" என்று சொல்வார்களே அதேபோல இந்தியா பைனலுக்குச் செல்லும் வாய்ப்பை இங்கிலாந்து அணியால் தட்டிப்பறிக்கவும் முடியும். அது அடுத்த டெஸ்டின் முடிவில் இருக்கிறது.

ஆட்டநாயகன் அக்ஸர்

2-வது டெஸ்ட் போட்டியில்தான் விளையாடிய அக்ஸர் படேல், இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பிங்க் பந்தில் முதன்முதலாக 11 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் எனும் பெருமையையும் படேல் பெற்றார்.

ஒட்டுமொத்தமாக 70 ரன்களுக்கு 11 வி்க்கெட்டுகளை வீழ்த்தி படேல் பட்டைய கிளப்பியுள்ளார். வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த அக்ஸர் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

400 விக்கெட்டுகள் சாதனை

அஸ்வின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருவரும் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் ராஜ்ஜியமே நடத்திவிட்டனர். இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டை வீழ்த்திய பெருமையை பெற்றார். இந்திய அளவில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் மைல்கல்லை அஸ்வின் அடைந்தார்.

எளிதான வெற்றி

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 112 ரன்களும், இந்திய அணி 145 ரன்களும் சேர்த்தன. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 30.1 ஓவர்களில் 81 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பதிவு செய்த மிகக்குறைவான ஸ்கோராகும்.

இதையடுத்து, 49 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆடி இந்திய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா 25 ரன்களிலும், ஷுப்மான் கில் 15 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிந்தது. அதன்பின் 2-வதுமுறையாக இந்தடெஸ்ட் போட்டி 2நாட்களி்ல் முடிந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 17 விக்கெட் வீழந்துள்ளது.

ஆடுகளம் விமர்சனம் நியாயமா?

ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது, பந்து அதிகமாகச் சுழலும்வகையில் அமைக்கப்படவி்ல்லை என்று கூறப்பட்டாலும், இரு அணிகளிலும் உள்ள பேட்ஸ்மேன்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தவில்லை என்பதே நிதர்சனம். ஒட்டுமொத்தத்தில் இரு அணிகளிலும் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியம் நடத்திவிட்டனர்.

இந்திய அணி எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆடுகளத்தை தேவைக்கு ஏற்றார்போல் மாற்றிஅமைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும், அதே ஆடுகளத்தில்தான் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களும் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பதை மறுக்க முடியாதே. ஜோ ரூட், லீச் ஆகியோர் விக்ெகட்டுகளை வீழ்த்தியபோது, இந்த ஆடுகளம் மோசமான ஆடுகளமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறதே.

இந்த ஆடுகளம் மெதுவாகப் பந்துவீசும் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 88கி.மீ முதல் 92கி.மீ வரை "ஸ்லோ ஸ்பின்னர்களுக்கு" இந்த ஆடுகளம் நன்றாகக் கை கொடுத்துள்ளது. அதன்படி அக்ஸர் படேல், லீச், ரூட் போன்றவர்கள் மெதுவாக வீசக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் என்பதாலும், லைன்லென்த்தைவிட்டு நகற்றாமல் பந்துவீசியதாலும் அவரின் பந்துவீச்சு நெருக்கடி தரும் விதத்தில் அமைந்துள்ளது.

மற்றவகையில் ஆடுகளத்தில் சூனியமோ, தகடோ ஏதும் இந்திய அணி வைக்கவில்லை, இந்திய அணிக்காக இரவோடு இரவாக ஆடுகளத்தை மாற்றவும் இல்லை.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஆன்டர்ஸன் என மணிக்கு 140கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசுவோரைத் தேர்வு செய்தால் வெற்றி என்பது குதிரைக்கொம்புதான்.

அதேநேரத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா போன்ற சவாலான ஆடுகளங்களில் பந்துவீசியும் பேட் செய்து தங்களின் திறமையை நிரூபித்தவர்கள் இந்திய அணியினர். அதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடிய இந்திய அணியினர் திறமையை உரசிப்பார்க்க இதுபோன்ற ஆடுகளங்கள் அமைத்துதான் 2 நாட்களி்ல் வெற்றி பெற வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.


அதேநேரத்தில், ஆகமதாபாத் ஆடுகளத்தில் போட்டி 2 நாட்களில் முடிந்துவிட்டதால், ஆடுகளத்தின் தரம் குறித்து ஐசிசி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் ஆய்வு செய்வாரா, என்ன சொல்லப்போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விக்கெட் சரிவு

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்திருந்தது. ரோஹித் சர்மா 57 ரன்களிலும், ரஹானே ஒரு ரன்னிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் மட்டுமே இருவரும் பேட் செய்தனர்.

ரஹானே 7 ரன்களில் லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 114 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அடுத்த சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா 66 ரன்கள் சேர்த்த நிலையில் லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ரிஷப் பந்த் (1), அஸ்வின் (17), வாஷிங்டன் சுந்தர் (0), அக்ஸர் படேல் (0), பும்ரா (1) என வரிசையாக ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 114 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைத்தான் இழந்திருந்தது.

ஆனால், அடுத்த 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது. இன்று கூடுதலாக 20 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 46 ரன்கள் கூடுதலாகச் சேர்த்து ஆட்டமிழந்தது.

ரூட் 5 விக்கெட்

52.3 ஓவர்களில் 145 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து 33 ரன்கள் முன்னிலை பெற்றது. பகுதிநேரப் பந்துவீச்சாளரான ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 6.2 ஓவர்களை வீசிய ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மோசமான பேட்டிங்

33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவரின் முதல்பந்தில் கிராலி(0) ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பேர்ஸ்டோ 3-வது பந்தில் பேர்ஸ்டோவும் போல்டாகி வெளியேறினார். சிப்ளி, ரூட் ஓரளவுக்குதான் தாக்குப்பிடித்தனர்.

சிப்ளே 7 ரன்னில் படேல் பந்துவீச்சில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ரூட்(19) ரன்னில் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஸ்டோக்ஸ்(25), போப்(12) இருவரையும் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். பின்வரிசை வீரர்கள் ஃபோக்ஸ்(8), ஆர்ச்சர்(0), லீச்(9), ஆன்டர்ஸன்(0) என வரிசையாக வெளியேறினர்.

50 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 31 ரன்களைச் சேர்ப்பதற்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் 80 முதல் 81 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது

இந்தியத் தரப்பில் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தவறவிடாதீர்!Axar-Ashwin showIndia hammers EnglandஸEnglandDay-night TestLeft-arm spinner Axar PatelThird Test in AhmedabadWorld Test Championship final

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x