Last Updated : 24 Feb, 2021 10:55 PM

 

Published : 24 Feb 2021 10:55 PM
Last Updated : 24 Feb 2021 10:55 PM

ரோஹித் அரை சதம்: இந்திய அணி நிதான ஆட்டம்: இங்கிலாந்துக்கு நம்பிக்கையளித்த கோலியின் விக்கெட்


ரோஹித் சர்மாவின் அரைசதத்தால் அகமதாபாத்தில் நடந்துவரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் 112 ரன்களில் ஆட்டமிழந்தது. அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து சரிவுக்கு முக்கியக் காரணமாகினர்.

அதன்பின் இந்திய அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கி ஆட்டநேரமுடிவில் 33 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் இங்கிலாந்தைவிட 13 ரன்கள் பின்தங்கியுள்ளது இந்திய அணி

ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நாளை ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். நாளை இந்தியஅணி எவ்வாறு விளையாடுகிறது, எவ்வளவு ஸ்கோர் செய்கிறது என்பதைப் பொறுத்துதான் ஆட்டம் நகர்ந்து செல்லும். இந்திய அணி 250 ரன்கள் அடித்துவிட்டாலே இந்த மைதானத்தில் மிகப்பெரிய ஸ்கோராக இருக்கும்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்து வருகிறது. நாளை பிற்பகல் ஆட்டம் தொடங்கும்போது, ஆடுகளம் நன்றாக காய்ந்திருக்கும் என்பதால், பேட்டிங்கிற்கு ஓரளவு நன்கு ஒத்துழைக்கும். இதைப் பயன்படுத்தி இந்திய அணி வீரர்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். நாளை விக்கெட்டை இழக்காமல் 250 ரன்கள்வரை ஸ்கோர் செய்வது அவசியம்.

ஆனால், ஆர்ச்சர், பிராட், ஆன்டர்ஸன் பந்துவீச்சு நாளை இந்திய அணி வீரர்கள் தாக்குப்பிடிப்பதும் கேள்விக்குறிதான். இங்கிலாந்து அணி இன்னும் 150 ரன்கள்கூடுதலாகச் சேர்த்திருந்தால், இந்திய அணிக்கு கடும் சவாலாக இந்த ஆட்டம் அமைந்திருக்கும்.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷூப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்குப் பதிலாக ஆன்டர்ஸன், ஆர்ச்சர், பிராட் என வேகப்பந்துவீச்சாளர்களே பந்துவீசினர்.

ரோஹித் சர்மாவும், ஷுப்மான் கில்லும் ரன்களை சேர்க்க முடியாத வகையில் பிராட், ஆர்ச்சர், ஆன்டர்ஸன் மூவரும் மிகத்துல்லியமாகவும், கட்டுக்கோப்பாகவும் பந்துவீசினர். இதனால் ரன் சேர்க்க மிகவும் திணறினர். அதிலும் ஆர்ச்சர் தனது இயல்புக்கு மேலான வேகத்தில் பந்துவீசி குலி, ரேஹித் சர்மாவை திணறவைத்தார்.


கில் 11 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஆர்ச்சர் பந்துவீச்சில் கிராலியால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா வந்த வேகத்தில் வெளியேறினார். லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி புஜாரா டக்அவுட்டில் பெலியின் திரும்பினார்.

3-வது விக்கெட்டுக்குவந்த கேப்டன் கோலி, ரோஹித்துடன் சேர்ந்து நிதானமாகப் பேட் செய்தார். ரோஹித் சர்மா அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். 9 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்.

ரோஹித் சர்மாவை ஸ்டெம்பிங் செய்து இங்கிலாந்து வீரர் அப்பீல் செய்தனர். ஆனால், டிஆர்எஸ் முடிவில் அது அவுட் இல்லை எனத் தெரியவந்தது. அதேபோல கோலி 24 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஆன்டர்ஸன் வீசிய பந்தில் கோலி அடித்த கேட்சை போப் த் தவறவிட்டார்.

கோலி களத்தில் நங்கூரமிட்டுவிடுவார் என இங்கிலாந்து அஞ்சினர். ஆனால், ஆட்டம் முடிய ஒருஓவர் இருந்தபோது, கோலி 27 ரன்கள் சேர்த்திருந்தபோது, லீச் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு கோலி, ரோஹித் இருவரும் 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது இங்கிலாந்து அணிக்கு நாளைக்கான பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. அதேசமயம், ஆபத்தான பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா களத்தில் இருப்பது இங்கிலாந்துக்கு கவலைக்குரிய அம்சமாகும்.

முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கிராலே,சிப்ளே ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி இசாந்த் சர்மா வீசிய 3-வது ஓவரில் ஸ்லிப் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து சிப்ளே டக்அவுட்டில் வெளியேறினார்.2 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்தது.

அடுத்துவந்த பேர்ஸ்டோ, கிாாலேயுடன் சேர்ந்தார். பேர்ஸ்டோ ஆபத்தானவர், நின்றுவிட்டால் ஸ்கோரை பெரிதாக உயர்த்திவிடுவார் என்பதால், தொடக்கத்தில் இருந்தே பேர்ஸ்டோவுக்கு நெருக்கடியாகப் பந்துவீசினர்.

அக்ஸர் படேல் வீசிய முதல் பந்தில் பேர்ஸ்டோ கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். 27-ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

3-வது விக்கெட்டுக்கு ரூட், கிராலே ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ரூட் பொறுமையாக பேட் செய்ய, கிராலே அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து 68பந்துகளி்ல் அரைசதம் அடித்தார்.

அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அஸ்வினின் பந்துவீச்சுக்கு ரூட் தொடக்கத்திலிருந்தே தடுமாறினார். ரூட் 17ரன்கள் சேர்த்திருந்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
அடுத்து வந்த ஸ்டோக்ஸ், கிராலேயுடன் சேர்ந்தார். அரைசதம் கடந்து ஆடிவந்த கிராலே 53 ரன்னில் அக்ஸர் படே்ல பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 80 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இங்கிலாந்து பறிகொடுத்தது.

தேநீர் இடைவேளியின் போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்திருந்தது.

தேநீர் இடைவேளைக்குப்பின் வந்தபின் இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டோக்ஸ், போப் இருவரின் விக்கெட்டையும் இங்கிலாந்து பறிகொடுத்தது.அஸ்வின் பந்துவீச்சில் போப் ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.

அக்ஸர் படேல் வீசிய ஓவரில் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 74ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 7 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்ததது.

ஜோப்ராஆர்ச்சர் 11 ரன் சேர்த்திருந்தபோது, அக்ஸர் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த லீச், 3 ரன்கள் சேர்த்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டூவர்ட் பிராட் 3 ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பென் ஃபோக்ஸ் 12 ரன்கள் சேர்த்த நிலையில் படேல் பந்துவீச்சில் போல்டாகினார். 48.4 ஓவர்களில் 112 ரன்களில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x