Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM

விளையாட்டாய் சில கதைகள்: இலங்கை கிரிக்கெட்டின் அதிரடி மன்னன்

கிரிக்கெட் உலகில் அதிரடி மன்னனாக விளங்கிய சனத் ஜெயசூர்யா, தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாள் இன்று. 1991-ம் ஆண்டு இதே நாளில்தான் (பிப்ரவரி 22) நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜெயசூர்யா அறிமுகமானார்.

1969-ம் ஆண்டு இலங்கையின் கடற்கரை நகரமான மடாராவில் பிறந்தார் ஜெயசூர்யா. சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட அவர், பள்ளி நாட்களிலேயே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, பல பரிசுகளை வென்றுள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல்முறையாக 1988-ம் ஆண்டில் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணிக்காக ஆடிய ஜெயசூர்யா, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் போட்டிகளில் 1989-ம் ஆண்டு முதல் ஆடினாலும், டெஸ்ட் போட்டியில் ஆட 1991-ம் ஆண்டுவரை அவர் காத்திருக்க வேண்டி இருந்தது.

1996-ம் ஆண்டில் இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜெயசூர்யா, இத்தொடரில் 221 ரன்களை குவித்ததுடன், 6 விக்கெட்களையும் கைப்பற்றினார். 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜெயசூர்யா, 6,973 ரன்களை குவித்ததுடன், 98 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதேபோன்று 445 ஒருநாள் போட்டிகளில் 13,430 ரன்களை குவித்ததுடன், 323 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். 2007-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2011-ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற ஜெயசூர்யா, பின்னர் அரசியலில் நுழைந்தார். மகிந்தா ராஜபக்‌சவின் கட்சியில் இணைந்தவர், பின்னர் இலங்கை அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x