Published : 21 Feb 2021 05:29 PM
Last Updated : 21 Feb 2021 05:29 PM

'அஸ்வினுக்கு இனிமேல் ஒருநாள், டி20 அணியில் இடம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை': சுனில் கவாஸ்கர் கருத்து

இந்திய அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப்படம்

புதுடெல்லி


ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இனிமேல், இந்திய ஒருநாள் மற்றும் டி20அணியில் இடம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் வந்தபின் ஒருநாள், டி20 போட்டிகளில் அஸ்வின் இடம் பெறுவது குறைந்துவிட்டது. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அஸ்வின் விளையாடினார். ஜூலை9ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடியதுதான் அஸ்வின் கடையாக பங்கேற்றதாக இருந்தது.

அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக அஸ்வினுக்கு ஒருநாள், டி20 அணியில் பங்கேற்க இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுவரும் அஸ்வின் தனது பங்களிப்பை முழுமையாக அளித்து ஒருநாள், டி20 போட்டிக்கும் தகுதியானவர் என்பதை நிரூபித்து வருகிறார்.

இதுவரை 111 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 675 ரன்களும், 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 46 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று அஸ்வின் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அஸ்வின் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:


எனக்குத் தெரிந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் மீண்டும் ஆல்ரவுண்டர் அஸ்வின் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், ஏற்கெனவே ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா இருவர் இருக்கிறார்கள். இதில் 7-வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெறலாம், அல்லது ஒரு சுழற்பந்துவீச்சாளர் இரு வேகப்பந்துவீச்சாளர்கள் கூட இடம் பெறலாம்.

ஆதலால் இப்போதுள்ள சூழலில் இந்திய ஒருநாள், டி20 அணிக்கு தகுதியானவராக அஸ்வின் இருப்பார் என நான்நினைக்கவி்லலை. என்னைப் பொருத்தவரை டெஸ்ட் போட்டிக்கு உகந்தவீரராகவே அஸ்வினைப் பார்க்கிறேன். அடுத்த 6 ஆண்டுகள்வரை அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தாராளமாக விளையாடலாம்."
இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிளில்அஸ்வின் இதுவரை 76 போட்டிகளில் விளையாடி 394 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2.82 எக்கானமியும், 2,626 ரன்களும் அஸ்வின் குவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x