காத்திருந்தது நடந்துவிட்டது: இந்திய அணியில் சூர்ய குமாருக்கு இடம்பெற்றதற்கு முன்னாள் வீரர்கள் பாராட்டு

சூர்யகுமார் யாதவ் : கோப்புப்படம்
சூர்யகுமார் யாதவ் : கோப்புப்படம்
Updated on
2 min read

இதற்காகத்தான் காத்திருந்தார், காத்திருந்தது நடந்துவிட்டது என்று இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைத்துள்ளது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் கடந்த 3 ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். 2018 ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள், 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 480க்கும் மேற்பட்ட ரன்கள், கடந்த ஐபிஎல் தொடரில் 480 ரன்களை சூர்யகுமார் யாதவ் சேர்த்துள்ளார்

மும்பை அணிக்காக விளையாடி 40 சராசரி வைத்துள்ள சூர்யகுமார் யாதவின் ஸ்ட்ரைக் ரேட் 145 ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பல்வேறு நெருக்கடியான தருணங்களில் மேட்ச் வின்னராக சூர்யகுமார் ஜொலித்துள்ளார்.

ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, அதில் சூர்யகுமார் யாதவ் இல்லை எனத் தெரிந்ததும் முதலில் தனது குரலை உயர்த்தி ஆதரவு தெரிவித்தவர் ஹர்பஜன் சிங்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றதும் அவருக்கு பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " இறுதியாக இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு ட்விட்டர் பதிவில் இஷான் கிஷனையும் வாழ்த்தி ஹர்பஜன் சிங் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்" வாழ்த்துகள் இஷான் கிஷன் இந்திய அணிக்குள் உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " இதற்காகத்தான் காத்திருந்தீர்கள். உங்கள் காத்திருப்பு முடிந்துவிட்டது சூர்யகுமார். வாழ்த்துகள். அதேபோல ராகுல் திவேஷியா, இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " இந்திய அணியில் முதல்முறையாக இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ், ராகுல் திவேஷியா, இஷான் கிஷன் ஆகியோருக்கு வாழ்த்துகள். உங்களின் சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்றது குறித்த சூர்யகுமார் யாதவ் ட்விட்டரில் கூறுகையில் " என்னால் நம்பமுடியவில்லை. நம்பமுடியாத விஷயங்கள் நடந்துள்ளதாகவே உணர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை 77 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 5,326 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in