Last Updated : 20 Feb, 2021 03:16 AM

 

Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

விளையாட்டாய் சில கதைகள்: வெளிநாட்டு மண்ணில் முதல் வெற்றி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான பிறகு, வெளிநாட்டு மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை ருசிக்க, இந்தியா 36 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டில் 31 போட்டிகளில் ஆடிய இந்தியா, 21 ஆட்டங்களில் தோற்று, 10 ஆட்டங்களை டிரா செய்திருந்தது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு, வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி வெற்றியை ருசித்த நாள் பிப்ரவரி 20. 1968-ம்ஆண்டில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக டுனெடின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்த முதல் வெற்றியை ருசித்தது. பொதுவாக நியூஸிலாந்து, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களைக் கொண்டது. இந்திய அணியிலோ, அப்போது வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களான ரமாகாந்த் தேசாய்க்கு வயதானதாலும், சுபர்தா குகாவுக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டதாலும் இந்திய அணி தடுமாறி இருந்தது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அபித் அலி, அனுபவம் இல்லாதவராக இருந்தார்.

இந்தச் சூழலிலும் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார் பட்டோடி. வேகப்பந்து வீச்சைவிட சுழற்பந்து வீச்சாளர்களான பேடியையும், பிரசன்னாவையும் அவர் அதிகம் நம்பினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபித் அலி 4 விக்கெட்களை வீழ்த்த, நியூசிலாந்து அணி 350 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா, அஜித் வடேகர் (80 ரன்கள்), பரூக் இஞ்ஜினீயர் (53 ரன்கள்) ஆகியோரின் உறுதியான பேட்டிங்கால் 359 ரன்களைச் சேர்த்தது. அடுத்த இன்னிங்ஸில் பிரசன்னா 6 விக்கெட்களை வீழ்த்த 208 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து. இதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி 71 ரன்களைக் குவித்த அஜித் வடேகர், இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x