

சாம்பியன்ஸ் டென்னிஸ் லீக் 2வது சீசன் போட்டிகள் நேற்றுமுன்தினம் மும்பையில் தொடங்கியது. இந்த தொடரில் வி சென்னை வாரியர்ஸ், பஞ்சாப் மார்ஷல்ஸ், மும்பை டென்னிஸ் மாஸ்டர்ஸ், ராய்ப்பூர் ரேஞ்சர்ஸ், நாக்பூர் ஆரஞ்சர்ஸ், ஹைதராபாத் ஏசஸ் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
13 ஆட்டங்கள் நடைபெறும் இந்த தொடரின் இறுதி போட்டி டிசம்பர் 6ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் மார்ஷல்ஸ்-மும்பை டென்னிஸ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 21-19 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் வி சென்னை வாரியர்ஸ்-ஹைதராபாத் ஏசஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் கோர்ட்டில் நடைபெறுகிறது.
வி சென்னை வாரியர்ஸ் அணியின் உரிமையாளராக வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஐசரி கணேஷூம், இணை உரிமையாளராக நடன இயக்குநர் பிரபுதேவாவும் உள்ளனர். சென்னை அணியில் ரெய்னர் ஷட்லர் (ஜெர்மன்), ஹீத்தர் வாட்சன் (இங்கிலாந்து), பெர்னாண்டோ வெர்டஸ்கோ (ஸ்பெயின்), விஷ்ணு வர்தன் (இந்தியா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐதராபாத் அணியில் தாமஸ் ஜான்சன் (ஸ்வீடன்), மார்ட்டினா ஹிங்கிஸ் (ஸ்விட்சர்லாந்து), இவோ ஹர்லோவிக் (குரோஷியா), ஜீவன் நெடுஞ்செழியன் (இந்தியா) ஆகியோர் விளையாடுகின்றனர். போட்டிகள் லேஜெண்ட்ஸ், ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் ரெய்னர் ஷட்லர்- தாமஸ் ஜான்சன், மார்ட்டினா ஹிங்கிஸ்-ஹீத்தர் வாட்சன், பெர்னாண்டோ வெர்டஸ்கோ-இவோ ஹர்லோவிக் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் மோதுகின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இவோ ஹர்லோவிக்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி பெர்னாண் டோ வெர்டஸ்கோ-விஷ்ணு வர்தன் ஜோடியை எதிர்கொள்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் பெர்னாண்டோ வெர்டஸ்கோ- ஹீத்தர் வாட்சன் ஜோடி இவோ ஹர்லோவிக்-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடியை சந்திக்கிறது.
சென்னை ஓபன் போட்டியை மட்டுமே இதுவரை பார்த்து வந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த போட்டியும் விருந்தாக அமையும். இந்த தொடரில் முதலிடத்தை பெறும் அணிக்கு ரூ.1 கோடியும், 2வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.