Published : 19 Feb 2021 07:30 PM
Last Updated : 19 Feb 2021 07:30 PM

ரூ.15 கோடியா? நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்தேன்; நியூஸி. டாலரில் எவ்வளவு என எனக்குத் தெரியவில்லை: ஆர்சிபி வீரர் ஜேமிஸன் உற்சாகம்

ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததைக் கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ரூ.15 கோடிக்கு நியூஸிலாந்து டாலரில் எவ்வளவு என எனக்கு அப்போது கணக்குத் தெரியவில்லை என்று நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிஸன் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் கைல் ஜேமிஸன். 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன் 10க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் அவரின் பந்துவீச்சும், அதிரடியான ஆட்டமும் ஐபிஎல் லீக்கிற்குள் இழுத்து வந்துள்ளது.

நியூஸிலாந்து நாட்டிலிருந்து அதிகபட்சமாக ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்ட முதல் வீரர் எனும் பெருமையையும் ஜேமிஸன் பெற்றார். 14 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் 4-வது அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரரும் ஜேமிஸன்தான்.

இந்திய மதிப்பின்படி ரூ.15 கோடியும், அமெரிக்க டாலர் மதிப்பின்படி 20 லட்சம் டாலருக்கும் ஜேமிஸனுக்கு ஆர்சிபி அணி விலை கொடுத்துள்ளது.

ஆர்சிபி அணி தன்னை ரூ.15 கோடிக்கு விலைக்கு வாங்கியது குறித்து கைல் ஜேமிஸன் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''நான் ஆர்சிபி அணியால் விலைக்கு வாங்கப்பட்டது குறித்து ஷேன் பாண்ட் எனக்குத் தெரிவித்தார். இந்தச் செய்தி அறிந்து நள்ளிரவில் எனது மொபைல் போனை செக் செய்தேன்.

இந்திய மதிப்பில் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்டதைப் பார்த்து உற்சாகத்தில் வியப்படைந்து, எழுந்து அமர்ந்துகொண்டேன். ஆனால், நள்ளிரவில் எனக்கு ரூ.15 கோடிக்கு நியூஸிலாந்து டாலருக்கு எத்தனை டாலர்கள் என மாற்றத் தெரியவில்லை. எனக்கு உற்சாகம் பீறிட்டது. உடனடியாக ஷேன் பாண்டை அழைத்து நான் ரூ.15 கோடிக்கு வாங்கப்பட்டதைத் தெரிவித்து அவரிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன்.

நான் லட்சக்கணக்கான டாலர்களுக்கு வாங்கப்பட்ட செய்தியை அறிந்ததும் என் சக வீரர்கள் நிச்சயம் விருந்து கேட்பார்கள். அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்தளிப்பேன். சில மணி நேரத்தில் என் வங்கிக் கணக்கு மொத்தமாக மாறிவிட்டது" எனத் தெரிவித்தார்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன்தான் தற்போது ஆர்சிபி அணியின் இயக்குநராக இருந்து வருகிறார். இவரின் முயற்சியால்தான் ஜேமிஸனுக்குக் கடும்போட்டி இருந்தபோதிலும், நீண்ட போராட்டத்துக்குப் பின் ஜேமிஸனை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x