Last Updated : 19 Feb, 2021 06:46 PM

 

Published : 19 Feb 2021 06:46 PM
Last Updated : 19 Feb 2021 06:46 PM

யார் இந்த ரிலே மெரிடித்? பஞ்சாப் கிங்ஸ் ரூ.8 கோடிக்கு வாங்கிய சர்வதேச அறிமுகம் இல்லாத வீரர்

ஆஸி. வீரர் மெரிடித் : படம் உதவி ட்விட்டர்


14-வது ஐபிஎல் ஏலத்தில் 5-வது மிகப்பெரிய தொகையான ரூ.8 கோடிக்கு எடுக்கப்பட்டவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிலே மெரிடித். சர்வதேச அறிமுகம் ஏதும் இல்லாத 24 வயது வீரரைப் பஞ்சாப் கிங்ஸ் அணி பல போட்டிகளுக்குப்பின் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது.


சர்வதேச அறிமுகம் இல்லாத ஒரு வீரரை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும். சர்வதேச அறிமுகம் இல்லாத மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன?


தாஸ்மானியாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான மெரிடித்தை ஆஸ்திரேலியா அணிக்குள் எடுக்கப் பல ஆண்டுகளாகப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பதை பஞ்சாப் அணிஎடுக்க முக்கியக் காரணம். அதிலும் குறிப்பாக ஷேன் வார்ன் , டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குத் துருப்புச் சீட்டாக மெரிடித் இருப்பார் என்று கணித்துள்ளார்.


கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய லெவன் அணியில் இடம் பெற்றதே மெரிடித்தின் முதல் அறிமுகமாகும். அதன்பின் 2017-18ம் ஆண்டில் தாஸ்மானியா அணிக்காகப் பலப் போட்டிகளில் மெரிடித் விளையாடியுள்ளார்.


அந்த ஆண்டு நடந்த பிக்பாஷ் லீக்கில் தைமால் மில்ஸ்குக்கு காயம் ஏற்பட மெரிடித் அரையிறுதியிலும், இறுதிப்போட்டியிலும் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. ஜோப்ரா ஆர்ச்சருக்கு கடும் போட்டியாக அந்தத் தொடரில் மெரிடித் விளங்கினார். ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்துவீச்சும், துல்லியத்தையும் கேள்வி கேட்கும் அளவுக்கு மெரிடித்தின் பந்துவீச்சு அமைந்திருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.


2018-19ம்ஆண்டுதான் மெரிடித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடிய மெரிடித் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


பிக்பாஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் இடம் பெற்று 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் மெரிடித் ஈர்த்தார். ஏற்கெனவே ஷேன் வார்ன் வேறு மெரிடித்தை ஆஸி. அணிக்குள் கொண்டுவாருங்கள் என்று வலியுறுத்திய நிலையில் மெரிடித்தின் இந்த அற்புதமான ஆட்டம் அவருக்கான ஆதரவுக் குரல்களை வலுப்பெறச் செய்தது.
2019-ம் ஆண்டில் பிக்பாஷ் லீக்கில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மெரிடித் காயம் காரணமாகப் பாதியிலேயே விலக நேரிட்டது. இந்த சீசனில் டி20 போட்டியில் மெரிடித்தின் எக்கானமி ரேட் 6.68ஆக வைத்திருந்தார்.


மார்ஷ் கோப்பையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எளிதாக வீழ்த்திய மெரிடித் பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2020ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மெரிடித்தை சேர்க்கப் பல ஆதரவுக் குரல்கள் வந்தபோதிலும் இறுதிவரை மெரிடித்தின் பெயரை ஆஸ்திரேலியத் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை.


2020-21-ம் ஆண்டில் நடந்த பிக்பாஷ் லீக்கில் மீண்டும் மெரிடித்த தனது திறமையை வெளிப்படுத்தி, 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெரிடித்தின் பந்துவீச்சில் பவர்ப்ளே ஓவர்களை டெத்ஓவர்களாகவே இருக்கும் அளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி கவனத்தை ஈர்த்தார். மெரிடித்தின் பந்துவீச்சைப் பார்த்த ஆஸ்திரேலியத் தேர்வாளர்கள் இறுதியாக நியூஸிலாந்து தொடருக்கான ஆஸி.அணியில் அறிவித்தனர்.


கடந்த ஆண்டு ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், " இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் உலகச்சிறப்பு வாய்ந்தது. அதில் எப்படியாவது நான் விளையாட வேண்டும். உலகின் தலைசிறந்த வீரர்கள் விளையாடும் அந்தத் தொடரில் இடம் பெற வேண்டும். எனக்கு அதில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் அந்த வாய்ப்பை இருகரத்துடன் வரவேற்றுப் பெற்றுக்கொள்வேன்"எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.


மெரிடித் குறித்து ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் கூறுகையில் " பலமுறை உள்நாட்டுப்போட்டிகளில் மெரிடித்தின் திறமை குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிக அற்புதமாகப் பந்து வீசுகிறார். ஆஸ்திரேலிய அணிக்குள் மெரிடித் வந்தால் இருகரத்துடன் வரவேற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x