'உலகிலேயே நான் மட்டும் தனியாக இருப்பதைப் போன்று உணர்ந்தேன்': 2014 இங்கிலாந்து தொடர் குறித்து மனம் திறந்த விராட் கோலி

விராட் கோலி : கோப்புப்படம்
விராட் கோலி : கோப்புப்படம்
Updated on
2 min read


கடந்த 2014-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நான் மோசமாக விளையாடியபோது, உலகிலேயே நான் மட்டும் தனியாக இருப்பதைப் போன்று உணர்ந்தேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல்முறையாக மனம் திறந்துபேசியுள்ளார்.

இங்கிலாந்துக்குக் கடந்த 2014-ம் ஆண்டில் இந்திய அணி பயணம் மேற்கொண்டது. இந்தத் தொடர் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாத பயணமாக, அந்த அளவுக்கு மோசமானதாக அமைந்தது.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் ஸ்விங் பந்துவீச்சில் பலமுறை விக்கெட் கீப்பரிடமும், ஸ்லிபிலும் கேட்ச் கொடுத்து கோலி பரிதாபமாக ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் கோலியின் ஸ்கோர், 1,8,25,0,39,28,0,6,20 ஆகிய ரன்களாகத்தான் இருந்தது.

இந்தத் தொடரில் கோலியின் சராசரி 10 இன்னிங்ஸில் 13.50 ரன்களாக இருந்தது. ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் படிப்பினையாகக் கொண்டு தனது தவறுகளைத் திருத்திக் கொண்ட கோலி, அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில 692 ரன்களை விளாசி கவனத்தை ஈர்த்தார்.

இங்கிலாந்து பயணத்தில் தான் அனுபவித்த வேதனைகள், பேட்டிங் ஃபார்ம் இல்லாதபோது தான் சந்தித்த மனவேதனைகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி, "நாட் ஜஸ்ட் கிரிக்கெட்"எனும் நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் வீர்ர மார்க் நிகோலஸுடன் பகிர்ந்துள்ளார்

இதில் விராட் கோலியுடனான உரையாடலின்போது " 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் மோசமாகப் பேட் செய்தபோது, எப்படி உணர்ந்திர்கள், மன அழுத்தம் இருந்ததா" என நிகோலஸ் கேட்டார்.

அதற்கு விராட் கோலி பதில் அளிக்கையில் " ஆமாம், நான் மிகுந்த வலியாக உணர்ந்தேன். அப்போது நான் அனுபவித்த உணர்வுகள் சிறப்பானது அல்ல. பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். உங்களால் அணியில் இருந்து கொண்டு தொடர்ந்து ரன் ஸ்கோர் செய்ய முடியாமல் போகும்போது அது சிறந்த உணர்வாக இருக்காது. எனக்குத் தெரிந்து அனைத்து பேட்ஸ்மேன்களும் இதே உணர்வுகளைக் கடந்திருப்பார்கள். அந்த நேரத்தில் எதுவுமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்ற உணர்வு இருக்கும்.

எப்போது இது முடிவுக்கு வரும் என்று கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாது. என்னால் அந்தநேரத்தில் எதையும் செய்ய முடியாதவனாகத்தான் இருந்தேன். இன்னும் சொல்லப்போனால் இந்த உலகிலேயே நான் தனிமனிதராக இருப்பதாக நான் அப்போது உணர்ந்தேன்

நான் மிகுந்த மன உளைச்சலிலும், நம்பிக்கையற்றவனாக இருந்தபோது எனக்குப் பலரும் ஊக்கமளித்தனர், யாரும் என்னுடன் பேசவில்லை, ஆதரவு அளிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், கிரிக்கெட் ரீதியாகப் பேசுவதற்கும், என்தவறுகளைப் புரிந்து கொள்ளவும் யாருமில்லை. இந்த நிலையிலிருந்து மாறுவதற்கு நான் விரும்பினேன்.
கிரிக்கெட்டில் தொழில்முறையில் சிறந்த ஒருவரின் உதவி எனக்குத் தேவைப்படுவதாக நான் நேர்மையாக உணர்ந்தேன்.

கடந்த 1990களில் இருந்த இந்திய அணிதான் என் கிரிக்கெட் சார்ந்த கற்பனையை மேலும் விசாலப்படுத்தியது. நான் பார்த்தவரையில் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. ஒருவர் தன்னை நம்பினால், தன் மீது சுயநம்பிக்கை அதிகம் வைத்தால், முடிவு செய்தால், அசாத்திய விஷயங்களைச் செய்ய முடியும் என்று நம்பினேன்.

அந்த தீப்பொறிதான் எனக்குள் இந்தியத் தேசத்துக்காக விளையாட வேண்டும் எனும் கனவைத் தூண்டிவிட்டது. என் வாழ்வில் 18வயதில் என் தந்தை பிரேம்சந்த்தை இழந்தேன். என் வாழ்க்கையில் என்னைப் பாதித்த மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். இந்த சம்பவம் என்னை ஒரு கோணத்தில் அழைத்துச் சென்றது. நான் சிறந்த கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என என் தந்தை விரும்பினார். என்னுடைய தந்தையின் கனவும், என்னுடைய கனவும் ஒருநாள் நனவாகும் தேசத்துக்காக உயர்ந்த இடத்தில் இருந்து விளையாடுவேன் என நம்பினேன்

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in