

சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை.
அதேசமயம் பியூஷ் சாவ்லாவை ரூ.2.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரும், பிக்பாஷ் லீக்கில் கலக்கிய ரிச்சார்ட்ஸனை ரூ.14 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது.
14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் சென்னையில் நடந்து வருகிறது. 61 இடத்துக்கு 292 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மேக்ஸ்வெல்லை ரூ.14 கோடிக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியுள்ளது.
அதேநேரத்தில் அதிர்ச்சி வரும் வகையில் இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் ராய், ஆஸி. வீரர்கள் அலெக்ஸ் கேரே, மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் லீவிஸ், ஷெல்டன் காட்ரெல் உள்ளிட்ட முக்கிய வீரர்களை ஏலத்தில் யாரும் விலை போகவில்லை.
அந்த வரிசையில் ஹர்பஜன் சிங்கும் சேர்ந்துள்ளார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் கடந்த முறை அந்த அணியில் விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் வீரர்கள் விடுவிப்பு பட்டியல் வெளியாகும் முன்பே ஹர்பஜன் சிங் தனது ஒப்பந்தத்தை சிஎஸ்கே அணியுடன் முடிந்துவிட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில் ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஹர்பஜன் சிங் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்து பியூஷ் சாவ்லாவுக்கு அடிப்படை விலையாக ரூ.1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டது. அவரை ரூ.2.40 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
வங்கதேச இடதுகை வேகப்பந்துவீ்ச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு அடிப்படை விலையாக ரூ.ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவரை அதே விலைக்கு ஆர்சிபி அணி விலைக்கு வாங்கியது.
பிக்பாஷ் லீக்கில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் இடம் பெற்றுக் கலக்கிய ஹை ரிச்சார்ட்ஸனுக்கு அடிப்படை விலையாக ரூ.1.50 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. முடிவில் ரூ.14 கோடிக்கு பஞ்சாப் அணி ரிச்சார்ட்ஸனை விலைக்கு வாங்கியது.
இங்கிலாந்து லெக்ஸ்பின்னர் அதில் ரசித், சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சர்மா, ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜிப்புர் ரஹ்மான் ஆகியோரையும் ஏலத்தில் யாரும் கேட்கவில்லை.