

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் கேமரூன் அணியை குரேஷியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் கேமரூன் அணி வெளியேறியது.
இடைவேளைக்குப் பிறகு குரேஷிய ஸ்ட்ரைக்கர் மரியோ மண்ட்சூகிக் 2 கோல்களை அடித்தார். பிரிவு ஏ-யில் இப்போது மெக்சிகோ அணிக்கும் குரேஷிய அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏனெனில் பிரேசில் அணி நிச்சயம் கேமரூனை வீழ்த்திவிடும்.
குரேஷியாவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே நடைபெறும் ஆட்டம் நிச்சயம் ஒரு இறுதிப்போட்டி போல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஃபவுல் ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கேமரூன் அணி இந்த ஆட்டத்தில் கடைசி 50 நிமிடங்கள் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. காரணம் குரேஷிய ஸ்ட்ரைக்கர் மண்ட்சூகிக்கை கேமரூன் வீரர் அலெக்சாண்டர் சாங் மோசமான முறையில் ஃபவுல் செய்தார். இதன் பலனாக சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெரிசிச் அனுப்பிய பந்தை ஓலிக் கோலாக மாற்றினார். 48வது நிமிடத்தில் இவான் பெரிசிச் 2வது கோலை அடிக்க இடைவேளைக்குப் பிறகு மரியோ மண்ட்சூகிக் 61 மற்றும் 73ஆம் நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார்.