Published : 16 Feb 2021 03:11 AM
Last Updated : 16 Feb 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: மயங்க் அகர்வாலும் விபாசனா தியானமும்

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான மயங்க் அகர்வால் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 16).

கடந்த 2018-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான இவர், 2 ஆண்டுகளுக்குள் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். பெங்களூருவில் 1991-ம் ஆண்டு மயங்க் அகர்வால் பிறந்தார். அவரது தந்தை அனுராக் அகர்வால், கட்டிடங்களைக் கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார். மயங்க் அகர்வால் 2018-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக அறிமுகமானார். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால், முதல் இன்னிங்ஸில் 76 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் தன் முதல் போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது.

பெங்களூரு மாநகர காவல் ஆணையராக இருந்த பிரவீன் சூட்டின் மகளான ஆஷிதா சூட்டை மயங்க் அகர்வால் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

தினமும் 6 மணிநேரம் பேட்டிங் பயிற்சி செய்யும் மயங்க் அகர்வால், உடலை உறுதியாக வைத்திருப்பதற்காக தினமும் 7 கி.மீ.தூரம் ஓடுகிறார். மேலும் மைதானத்தில் பதற்றம் இல்லாமல் மனதை அமைதியாக வைத்திருப்பதற்காக விபாசனா முறை தியானத்தையும் கடைபிடிக்கிறார்.

2017-18 ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த மயங்க் அகர்வாலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ‘மாதவராவ் சிந்தியா விருது’ வழங்கியுள்ளது. கிரிக்கெட்டை போலவே கால்பந்து விளையாட்டையும் அதிகம் நேசிக்கும் மயங்க் அகர்வாலுக்கு ஆர்செனல் அணியை மிகவும் பிடிக்குமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x