

சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க சென்னை மாணவர் கார்த்திகேயன் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் 53-வது தேசிய பிரீமியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் கடந்த 14-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. 13 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில் தமிழகத்தின் கார்த்திகேயன் முரளி, பெட்ரோலிய நிறுவன வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி ஆகியோர் 8.5 புள்ளிகள் பெற்றனர்.
இதில் முன்னேற்றப் புள்ளிகளின் அடிப்படையில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி முதலிடம் பெற்றார். இவருக்கு பரிசுத்தொகையாக ரூ.2.5 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த விதித் சந்தோஷ் குஜராத்திக்கு ரூ.1.40 லட்சம் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் விளையாட கார்த்திகேயன் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆசிய அளவிலான செஸ் போட்டி, ஒலிம்பியாட் செஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் பெற்றுள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேயன் முரளி கூறும்போது, “எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கரந்தை. எனது தந்தை மின் வாரியத்தில் பணியாற்றுகிறார். நான் 6 வயது முதல் செஸ் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது சென்னை வேலம்மாள் மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறேன். செஸ் பயிற்சியாளர் விஸ்வேஸ்வரனிடம் நான் பயிற்சி பெற்றேன். செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் போல சாதிக்க வேண்டுமென்பதே எனது விருப்பம்” என்றார்