Last Updated : 15 Feb, 2021 03:11 AM

 

Published : 15 Feb 2021 03:11 AM
Last Updated : 15 Feb 2021 03:11 AM

அஸ்வின் அபார பந்து வீச்சு; 134 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து: இந்திய அணி 249 ரன்கள் முன்னிலை

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 88 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 0, சேதேஷ்வர் புஜாரா 21, விராட் கோலி 0, ரோஹித் சர்மா 161, அஜிங்க்ய ரஹானே 67, ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பந்த் 33, அக்சர் படேல் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அக்சர் படேல் 5, இஷாந்த் சர்மா 0, குல்தீப் யாதவ் 0, மொகமது சிராஜ் 4 ரன்களில் நடையை கட்டினர். தனது 6-வது அரை சதத்தை அடித்த ரிஷப் பந்த் 77 பந்துகளில், 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் மொயின் அலி 4, ஆலி ஸ்டோன் 3, ஜேக் லீச் 2 விக்கெட்கள் கைப்பற்றினர். தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ரோரி பர்ன்ஸ் (0), இஷாந்த் சர்மா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்களை இழந்தது. டாம் சிப்லி 16, டான் லாரன்ஸ் 9 ரன்களில் அஸ்வின் பந்தில் வெளியேறினர். கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களில் அறிமுக வீரரான அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

39 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டானார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய ஆலி போப் 22 ரன்களில் மொகமது சிராஜ் பந்தில், ரிஷப் பந்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். மொயின் அலி 6, ஆலி ஸ்டோன் 1, ஜேக் லீச் 5, ஸ்டூவர்ட் பிராடு 0 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணி 59.5 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பென் ஃபோக்ஸ் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அஸ்வின் 5, இஷாந்த் சர்மா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மா 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களும் சேதேஷ்வர் புஜாரா 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஷுப்மன் கில் 14 ரன்களில் ஜேக் லீச் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x