Published : 14 Feb 2021 05:45 PM
Last Updated : 14 Feb 2021 05:45 PM

பரபரப்பான 2-ம் நாள் ஆட்டம்; தடுமாற்றத்தில் இங்கிலாந்து: வெற்றியை நோக்கி இந்தியா

படம் உதவி பிசிசிஐ ட்விட்டர்

சென்னை

2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் பரபரப்பான ஆட்டமாக அமைந்தது. ஒரே நாளில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புடன் 249 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரோஹித், புஜாரா களத்தில் உள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. இன்றைய ஆட்டம் இங்கிலாந்துக்கு மோசமாக அமைந்தது. வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது இங்கிலாந்து. இதனால் இந்தியா 195 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்த இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சுழல் பந்துக்குத் தோதான மைதானம் என்பதால் கூடுதலாக குல்தீப் யாதவ், அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர்.

முதலில் ஆடிய இந்திய அணி வலுவான அடித்தளத்துடன் 329 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரோஹித் ஷர்மா 161 ரன்கள் எடுத்தார். ரஹானே, ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்து இன்று காலையில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்துக்கு இன்று காலை முதலே பேரிடியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோயின.

காலையில் விக்கெட்டுகள் விழ ஆரம்பித்ததும் தனது அதிரடி மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளினார் ரிஷப் பந்த். அவருடன் யாரும் இணையாக நிற்காததால் எதிர்முனையில் விக்கெட்டுகள் சரிய ரிஷப் பந்த் மட்டும் நாட் அவுட்டாக 58 ரன்களைச் சேகரித்திருந்தார். இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து முதல் இன்னிங்ஸை உற்சாகத்துடன் தொடங்கிய இங்கிலாந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. முதல் ஓவரிலேயே விக்கெட் விழ நிதானமாக ஆட வேண்டும் என எண்ணிய இங்கிலாந்து, 7 ஓவர்கள் கடந்த நிலையில் 16 ரன்கள் இருந்தபோது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அஸ்வின் வீசிய பந்தில் சிப்லி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ரூட் கலக்குவார், நிதானமாக நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 136 ரன்களை ஸ்ட்ரைக் ரேட்டாக வைத்து, முதல் இன்னிங்ஸில் இந்தியாவைக் கலங்கடித்தவர். ஆனால், அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அக்சர் படேல் வீசிய பந்தில் தனது வழக்கமான வெற்றிகரமான ஸ்வீப் ஷாட்டை ஆடும்போது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரது விக்கெட்டை அக்சர் படேல் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட் கணக்கைத் தொடங்கினார். அதன் பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ், டான் லாரன்ஸுடன் இணைந்து ஆடினார். ஆனாலும், இந்திய அணியின் கடுமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டான் லாரன்ஸ் அஸ்வின் வீசிய பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்த ரன்கள் 9 மட்டுமே.

அடுத்து வந்த போப் மட்டுமே ஒரு பக்கம் நிலைத்து ஆட ஸ்டோக்ஸ் அஸ்வின் பந்தில் கிளீன் போல்டாகி அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 18 மட்டுமே. அடுத்து களம் இறங்கிய ஃபோக்ஸ் நிலைத்து ஆடினார். சிராஜுக்கு முதல் ஓவரைக் கொடுக்க முதல் ஓவர் முதல் பந்திலேயே போப், ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து மொயின் அலி, அக்சர் பந்தில் முதல் ஸ்லிப்பில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோன் 5 பந்துகள் மட்டுமே ஆடிய நிலையில், 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லீச், ஃபோக்ஸுடன் இணைந்து நிதானமாக ஆடினார். ஆனாலும் பலன் அளிக்கவில்லை. 5 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்தில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் (அற்புதமான டைவ் கேட்ச்) கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே மீதம் உள்ளது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க வேண்டும் எனப் போராடிய இங்கிலாந்து அணி 134 ரன்களைக் கடந்ததால் ஃபாலோ ஆனிலிருந்து தப்பியது. அடுத்து வந்த ஸ்டூவர்ட் ப்ராட் ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன்மூலம் அவர் 29-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்றார்.

இந்த இன்னிங்ஸில் ரிஷப் பந்த் இரண்டு கேட்ச்சுகளை அற்புதமாக டைவ் அடித்துப் பிடித்தார். 9-வது விக்கெட்டை அவர் பாய்ந்து நூலிழையில் தவறவிடும் வாய்ப்பிருந்தும் கேட்ச்சைப் பிடித்தது சிறப்பான கேட்ச்சாக அமைந்தது. ஃபோக்ஸ் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிகபட்ச ரன் எடுத்ததும் அவர்தான்.

மொத்தம் 59.5 ஓவர்களே ஆடிய இங்கிலாந்து அணியில் இரட்டை இலக்க எண்களை அடித்த பேட்ஸ்மேன்கள் 4 பேர் மட்டுமே. மற்ற அனைவரும் கேப்டன் ரூட் உட்பட ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். இந்திய அணியில் அஸ்வின் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 23.5 ஓவர்களை வீசிய அவர் 43 ரன்கள் கொடுத்து (1.8/ ஓவர்) 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அறிமுக வீரர் அக்சர் படேல் 20 ஓவர்கள் வீசி 40 ரன்கள் (2 / ஓவர்) கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இஷாந்த் சர்மா 5 ஓவர்கள் வீசி 22 ரன்களைக் கொடுத்து (4.4/ஓவர்) 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ்16 ஓவர்கள் வீசி விக்கெட் இல்லை. சிராஜ் 5 ஓவர்கள் வீசி 5 ரன்கள் (1/ஓவர்) மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

இதனிடையே இந்தியா தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரோஹித் சர்மா, கில் ஆடத் தொடங்கினர். ஆரம்பத்தில் உறுதியாக, அதிரடியாக ஆடினர். அணியின் ஸ்கோர் 42 ரன்களாக இருந்த நிலையில் ஷுப்மன் கில், லீச் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். மறுபுறம் ரோஹித் சர்மா நிதானமாக ஆடினார்.

ஆனாலும், அவருக்கு 4 முறை லைஃப் கிடைத்தது. இதில் ஒருமுறை ரன் அவுட் ஆகவேண்டியது. பாய்ந்து விழுந்து இலக்கைத் தொட்டதால் தப்பித்தார். ஒருமுறை லீச் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ கோரப்பட்டது. நடுவர் அவுட் கொடுக்காமல் மூன்றாவது நடுவரிடம் சென்று நாட் அவுட் ஆனது. அடுத்து பந்தை அடிக்க ஏறி ஆடும்போது பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் கைக்குச் சென்றது. அவர் அதைப் பிடிக்காமல் விட்டதால் ஸ்டெம்பிங் ஆகும் வாய்ப்பிலிருந்து தப்பினார்.

4 முறையாகக் கிடைத்த லைஃப், எல்பிடபிள்யூ என இங்கிலாந்து தரப்பில் கோர, நடுவர் உடனே அவுட் கொடுக்க அடுத்த நொடியே ரோஹித் சர்மா நம்பிக்கையுடன் ரிவ்யூ கேட்க, மூன்றாவது நடுவர் ஆய்வு செய்யும்போது பந்து லேசாக பேட்டில் உரசிச் செல்வது தெரியவந்தது. இதனால் நடுவர் கணிப்பு தவறாகி நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

ரோஹித் சர்மா, புஜாரா நிலைத்து ஆடிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து, 249 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து தரப்பில் லீச் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

இரண்டாம் நாள் ஆட்டம் பரபரப்பாக முடிந்த நிலையில் இந்தியா நாளை மேலும் 150 ரன்கள் அடித்து 400 ரன்களுக்கு டிக்ளேர் செய்து இங்கிலாந்தை வீழ்த்த வியூகம் வகுக்க வாய்ப்புள்ளது. 400 என்கிற இலக்கை எட்டுவது கடினம். சுழல் பந்துக்குத் தோதான மைதானம் என்பதால் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட்டில் எதுவும் நிகழலாம், அதுதான் கிரிக்கெட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x