Last Updated : 13 Feb, 2021 07:29 PM

 

Published : 13 Feb 2021 07:29 PM
Last Updated : 13 Feb 2021 07:29 PM

அட்டகாசமான சதம்; சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்த ரோஹித் சர்மா: ரஹானே பொறுப்பான ஆட்டம்: சவாலான ஸ்கோரை நோக்கி இந்தியா

சென்னையில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா : படம் உதவி ட்விட்டர்

சென்னை


‘ஹிட் மேன்’ ரோஹித் சர்மாவின் ஆகச்சிறந்த சதம், துணைக் கேப்டன் ரஹானேயின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று இந்திய அணி சவாலான ஸ்கோரை நோக்கி நகர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்புக்குப்பின் மைதானத்துக்கு வந்திருந்த சென்னை ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா பவுண்டரி,சிஸ்கர் என விளாசி அருமையான விருந்தளித்தார்.

முதல்நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப்பந்த் 33 ரன்களுடனும், அக்ஸர் படேல் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

டாஸ்வென்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ரோஹித் சர்மா அளித்த அதிரடியாக ஆரம்பித்த தொடக்கம்தான் இந்திய அணி முதல்நாளிலேயே மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவியது. 231 பந்துகளில் 2 சிக்ஸர், 18பவுண்டரி உள்பட 161 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். டெஸ்ட் அரங்கில் ரோஹித் சர்மா அடிக்கும் 7-வது சதம், சென்னையில் அடித்த முதலாவது சதம். கடந்த 15 மாதங்களுக்கு பிறகு அடித்த முதல் சதமாகும்.

இவருக்கு துணையாகஆடிய துணைக் கேப்டன் ரஹானே 149 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு நன்கு அடித்தளம் அமைத்தனர்.

ஹிட்மேன் சாதனை

ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டி20, டெஸ்ட் என 106 இன்னிங்ஸ் ஆடி ரோஹித் சர்மா அடிக்கும் 19-வது சதமாகும்.

கிரிக்கெட் உலகில் எந்த நாட்டு அணியின் பேட்ஸ்மேனும் இந்த காலகட்டத்தில் இத்தனை சதங்களை அடித்ததில்லை. இதில் 4 டெஸ்ட் சதங்கள்(21இன்னிங்ஸ்), ஒருநாள்போட்டியில் 13 சதங்கள்(49இன்னிங்ஸ்), டி20 போட்டியில்(36இன்னிங்ஸ்) 2 சதங்களை ரோஹித் சர்மா அடித்துள்ளார்.

இதுவே விராட் கோலி 120 இன்னிங்ஸ்களில் 18 சதங்களை அடித்துள்ளார். இதில் டி20 போட்டிகளில் எந்த சதமும் அடிக்கவில்லை. பாபர் ஆசம் 103 இன்னிங்ஸ்களில் 10 சதங்கள் அடித்தாலும், டி20 போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் வார்னர் மட்டுமே விதமான பிரிவுகளிலும் சதம் அடித்துள்ளார் என்றாலும் ரோஹித் சர்மா அளவுக்கு சதங்கள் அடிக்கவில்லை.

கோலியின் பேச்சு..

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் சரியாக அமைக்கவில்லை, 3-வது நாளில் இருந்துதான் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது என கேப்டன் கோலி புகார் தெரிவித்திருந்தார். அவரின் குறையைப் போக்கும் விதமாக முதல்நாளில் பந்து சுழலும் வகையில் விரிசல்கள் அதிகமாக இருக்கும் ஆடுகள் தயாரிக்கப்பட்டது.

ஆனால், கோலி பேச்சு ஆப்பசைத்த குரங்கு கதையாக மாறிவிட்டது. ஆடுகளம் சரியில்லை என்று விரிசல் நிறைந்த பிட்சை கோலி கேட்டு வாங்கினார். அதே ஆடுகளத்தி்ல் மொயின் அலி பந்துவீச்சில் டக்அவுட்டில் கோலி வெளியேறினார்.

5 நாட்களுக்கு தாங்காது

தற்போது இருக்கும் ஆடுகளத்தில் போட்டி 5 நாட்கள் வரை நடப்பது கடினம்தான் 3 முதல் மூன்றரை நாட்களுக்குள் ஆட்டம் முடிவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 350 ரன்கள் அடித்தாலே நல்ல ஆடுகளங்களில் 550 ரன்கள் அடித்தற்கு சமம்.

ஆதலால், நாளை 2-ம் நாள் ஆட்டத்தில் ரிஷப்பந்த், அக்ஸர் படேல் கூட்டணி ஓரளவுக்கு தாக்குப்படித்து 100 ரன்கள் வரை அடித்துவிட்டால் இங்கிலாந்து அணியின் பாடு திண்டாட்டம்தான். முதல்நாளிலேயே பந்து ஏனோதானோ என டர்ன் ஆகிறது, 2-வது மற்றும் 3-வதுநாளில் கேட்கவே தேவையில்லை.

கில் ஏமாற்றம்

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கில், ரோஹித் சர்மா களமிறங்கினர். ஸ்டோன் வீசிய 2-வது ஓவரில் கில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ரன் ஏதும் சேர்க்காமலேயே இந்திய அணி விக்கெட்டை பறிகொடுத்தது.

சூழலை அறிந்து கொண்ட ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்துக்கு திரும்பினார். பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் இந்த ஆடுகளத்தில் தொடக்கதில் இருந்தே அடித்து ஆடினால் எளிதாக ஸ்கோர் செய்துவிடலாம் என்று கணக்கி்ட்டு ஷாட்களை ஆடினார். அதிலும் ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே டிஃபென்ஸ் ப்ளேயை அருமையாகக் கையாண்டார்.

அதிரடி சர்மா

ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆடி பவுண்டரி கணக்கைத் தொடங்கிய ரோஹித் சர்மா அதன்பின் டீசல் எஞ்சின் போல் பிக்அப் ஆகினார். உச்சகட்டமாக பென் ஸ்டோக்ஸ் பந்தில் மிட்விக்கெட் ஆப் திசையில் அடித்த சிக்ஸர் அற்புதமானது.

ரோஹித்துக்கு துைணயாக புஜாரா ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொடுத்தார். இதனால் 47 பந்துகளில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். முதல் செஷனில் இந்திய அணி 80 ரன்களுக்கு மேல்சேர்த்தது.

கோலி டக்அவுட்

2-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தநிலையில், புஜாரா 21 ரன்னில் லீச் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி வந்த வேகத்தில் மொயின் அலி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஆப்-சைடு விலகிச் சென்ற பந்து டர்ன்ஆகி போல்டாகியது. ஆடுகளம் முதல்நாளிலேயே எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.

கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் டக்அவுட்டில் இதுவரை வேகப்பந்துவீச்சாளர்களிடம் மட்டுமே விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். ஆஃப்சைடு விலகிச் சென்ற பந்தை டிரைவ் ஆட முயன்று ஸ்டெம்பை பந்து பதம்பார்த்தை கோலியால் கூட நம்பமுடியவில்லை. கோலி ஆட்டமிழந்ததும் அரங்கில் சில வினாடிகள் நிசப்தம் நிலவியது.

மொயின் அலிக்கு பெருமை

முதல் முறையாக சுழற்பந்துவீச்சாளரான மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார். இதுவரை 10 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி டக்அவுட் ஆகியதும் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ரஹானே களமிறங்கி, ஹிட்மேனுடன் சேர்ந்தார். ரஹானே வழக்கமான ஸ்டைலில் ஆடத் தொடங்கினார். ரோஹித்சர்மா அவ்வப்போது அதிரடியாக சில ஷாட்களை ஆடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.

7-வது சதம்

ரோஹித் சர்மா 130 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது சதத்தை நிறைவு செய்தார். ரஹானே 104 பந்துகளில் அரைசதம் அடித்தார். 208 பந்துகளில் ரோஹித் சர்மா 150ரன்களை எட்டினார்.

லீச் வீசிய பந்தில் ரஹானே பேட்டிலும் கால்காப்பிலும் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியினர் டிஆரஎஸ் கோரியும், மூன்றாவது நடுவர் சவுத்ரி அனைத்து கோணத்திலும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், ரஹானே விக்கெட் விரைவாக விழுந்திருக்கும்.

ரோஹித் சர்மா 161 ரன்கள் சேரத்த நிலையில் லீச் பந்துவீச்சில் ஸ்வீச் ஷாட் ஆட முயன்று மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ரோஹித்,ரஹானே இருவரும் 162 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

டுத்த சிறிது நேரத்தில் ரஹானே 67 ரன்கள் சேர்த்தநிலையில் மொயின் அலி பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ரிஷப்பந்த், அஸ்வின் ஜோடி சிறிதுநேரமே நிலைத்து நின்றனர். அஸ்வின் 13 ரன்கள் சேர்த்தநிலையில் ரூட் பந்துவீச்சில் வி்க்கெட் இழந்தார். ரிஷப்பந்த், அக்ஸர் படேல் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி, லீச் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x