Last Updated : 13 Feb, 2021 02:23 PM

 

Published : 13 Feb 2021 02:23 PM
Last Updated : 13 Feb 2021 02:23 PM

15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா அற்புதமான சதம்: புதிய சாதனை படைத்த ரோஹித்: கோலி,கில் ஏமாற்றம்

சென்னையில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா : ப டம் உதவி ட்விட்டர்

சென்னை



சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபார சதம் அடித்து டெஸ்ட்அரங்கில் 7-வது சதத்தை பதிவு செய்தார்.

45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 129 ரன்களிலும் ரஹானே 51 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.

சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி யோசிக்காமல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஸ்டோன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஷுப்மான் கில் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார்.

புஜாரா நிதானமாக ஆட மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலடியாக 47 பந்துகளில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்.

புஜாரா நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்னில் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.2-வது விக்கெட்டுக்கு இருவரும் 85 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் கோலி 5 பந்துகளைச் சந்தித்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். இந்திய அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் கோலியை டெஸ்ட் அரங்கில் டக்அவுட்டில்ஆட்டமிழக்கச் செய்த முதல் சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன் டெஸ்ட் அரங்கில் 10 முறை விராட் கோலி டக்அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். அந்த 10 முறையும் வேகப்பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்தார். முதல்முறையாக சுழற்பந்துவீச்சில் கோலி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய துணைக் கேப்டன் ரஹானே ரோஹித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக ஆடத் தொடங்கினார்.

களத்தில் நின்றுவிட்டாலே அசைக்க முடியாத வகையில் ஆடக்கூடிய ரோஹித் சர்மா தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தார்.

அணியைச் சரிவிலிருந்து மீட்ட ரோஹித் சர்மா 130 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் அரங்கில் ரோஹித் சர்மாவுக்கு 7-வதுசதமாக அமைந்தது.

ரோஹித்தின் புதிய சாதனை

15 மாதங்களுக்குப்பின் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரோஹித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இந்திய மண்ணில் அடித்த 7-வது சதமாகும். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா சதம் அடித்திருந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள், டி20, டெஸ்ட் என 106 இன்னிங்ஸ் ஆடிய ரோஹித் சர்மா அடிக்கும் 19-வது சதமாகும்.

கிரிக்கெட் உலகில் எந்த நாட்டுஅணியின் பேட்ஸ்மேனும் இந்த காலகட்டத்தில் இத்தனை சதங்களை அடிக்கவில்லை. இதில் 4 டெஸ்ட் சதங்கள்(21இன்னிங்ஸ்), ஒருநாள்போட்டியில் 13 சதங்கள்(49இன்னிங்ஸ்), டி20 போட்டியில்(36இன்னிங்ஸ்) 2 சதங்களை ரோஹித் சர்மா அடித்துள்ளார்.

இதுவே விராட் கோலி 120 இன்னிங்ஸ்களில் 18 சதங்களை அடித்துள்ளார். இதில் டி20 போட்டிகளில் எந்த சதமும் அடிக்கவில்லை. பாபர் ஆசம் 103 இன்னிங்ஸ்களில் 10 சதங்கள் அடித்தாலும், டி20 போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் வார்னர் மட்டுமே விதமான பிரிவுகளிலும் சதம் அடித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x