விளையாட்டாய் சில கதைகள்: சென்னையில் உருவான டென்னிஸ் வீரர்
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதிக்குப் பிறகு டென்னிஸ் உலகில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடித்த சோம்தேவ் தேவ்வர்மனின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 13). அசாமில் உள்ள குவாஹாட்டி நகரில், திரிபுராவைச் சேர்ந்த ரஞ்சனா, பிரவஞ்சன் தேவ் வர்மன் ஆகியோருக்கு மகனாக சோம்தேவ் தேவ்வர்மன் பிறந்தார். அவரது தந்தை பிரவஞ்சன் தேவ்வர்மன், வருமானவரித் துறை கமிஷனராக இருந்தார்.
சோம்தேவ் தேவ்வர்மனுக்கு 8 வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படித்த சோம்தேவ், படிக்கும் காலத்திலேயே டென்னிஸ் விளையாட்டிலும் பயிற்சி பெறத் தொடங்கினார். அந்த வகையில் அவர் ஒரு சிறந்த டென்னிஸ் வீரராக உருவெடுத்ததில் சென்னை நகரம் முக்கிய பங்கு வகித்தது.
17 வயது முதல் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய சோம்தேவ், 2004-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த எஃப்2 சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பட்டம் வென்றவர், 2009-ம் ஆண்டில் நடந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அவர் தனது பயணத்தை தொடங்க, இந்த டென்னிஸ் தொடர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம் உட்பட இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றுள்ள சோம்தேவ், தனிப்பட்ட முறையிலும் பல போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். சோம்தேவ் தேவ்வர்மனை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டில், அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.
