Last Updated : 12 Feb, 2021 03:16 AM

 

Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் காதலர் ரிச்சி பெனாட்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ரிச்சி பெனாட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நாள் இன்று (பிப்ரவரி 12).

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 1930-ம் ஆண்டு ரிச்சி பெனாட் பிறந்தார். உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில், அவரது அப்பா லூயிஸ் சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அதனால் சிறுவயதிலேயே ரிச்சி பெனாட்டுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரிச்சி பெனாட், 1952-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரிச்சி பெனாட், 2,201 ரன்களை எடுத்ததுடன் 248 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 1964-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய காலகட்டத்தைவிட, கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த காலகட்டம்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சரளமான மற்றும் நகைச்சுவைமிக்க தனது வர்ணனையால் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவர் மேலும் சுவை கூட்டினார். ‘சேனல் நைன்’ தொலைக்காட்சியில் நீண்டகாலம் அவர் வர்ணனையாளராக இருந்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளின்போது ஒரு கணத்தைக்கூட அவர் தவற விடமாட்டார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்வார்கள். புகழ்பெற்ற டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வர்ணனையாளர்கள் அறைக்கும், கழிப்பறைக்கும் இடையே நீண்ட தூரம் இருந்தது. அதனால் அங்கு செல்லும் சமயத்தில் ஆட்டத்தின் ஏதாவது ஒரு முக்கிய அம்சத்தை தவறவிட்டு விடுவோமோ என்பதால் சிறுநீர் கழிக்கக்கூட செல்லாமல் வர்ணனையாளர் அறையிலேயே இருப்பாராம் ரிச்சி பெனாட். பின்னாளில் அவரது வேண்டுகோளுக்கு இணங்க, டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வர்ணனையாளர் அறைக்கு அருகிலேயே கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x