Last Updated : 11 Feb, 2021 03:53 PM

 

Published : 11 Feb 2021 03:53 PM
Last Updated : 11 Feb 2021 03:53 PM

தோல்விக்கு பொறுப்பேற்ற குணம் என்னைக் கவர்ந்தது: கோலியை புகழ்ந்த தடகள வீரர் யோகன் பிளேக்


இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு அணிவீரர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்று கூறாமல் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட கோலியின் குணம் என்னைக் கவர்ந்துள்ளது என ஜமைக்கா தடகள வீரர் யோகன் பிளேக் பாராட்டியுள்ளார்.


சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப்பின் பேட்டியளித்த கேப்டன் கோலி, மோசமாக விளையாடியதை ஒப்புக்கொண்டாலும் எந்த வீரர்கள் மீதும் குறைகூறவில்லை.


விராட் கோலியின் இந்த பேட்டி குறித்து ஜமைக்கா நாட்டின் தடகள வீரர் யோகன் பிளேக் தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த யோகன் பிளேக் தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


யோகன் பிளேக் வெளியிட்ட வீடியோவில், “ இந்திய அணியை எனக்கு மிகவும் பிடிக்கக் காரணமே, தோல்விக்கு கேப்டன் கோலி எந்தவிதமான காரணமும் கூறாமல் ஏற்றுக்கொண்டதுதான், யாரையும் குறைகூறாமல், அனைத்தும் காரணம் எனக் கூறினார். கோலியின் தலைமையை இதனால்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.


பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசவி்ல்லை, பேட்ஸ்மேன்கள் நிலைத்தன்மையுடன் விளையாடியவில்லை எனக் கூறி. நாங்கள் ஓய்வறைக்குச் சென்று ஆலோசித்து மீண்டு வருவோம் என கோலி தெரிவித்தார். ஒரு தோல்விக்குப்பின் உடனடியாக உற்சாகமாக எழும் கோலியின் கேப்டன் பொறுப்பு இதனால்தான் எனக்குப்பிடித்துள்ளது.


டெஸ்ட் கிரிக்கெட் உண்மையில் மிகச்சிறந்தது. ஏனென்றால், ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டில் இந்திய அணி தோற்றது. ஆனால், அதன்பின் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று அடுத்தடுத்து சிறப்பாகச் செயல்பட்டு தொடரை வென்றது. ஆதலால் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை காண ஆவலுடன் இருக்கிறேன்.


இளம் வீரர்கள் ஷுப்மான் கில், ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாகப் பேட் செய்கிறார்கள். ரிஷப்பந்தின் பேட்டிங் அற்புதமாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப்பந்திடம் நாம் சிறந்த பேட்டிங்கை எதிர்பார்க்க முடியாது என்றாலும் சிறப்பாக விளையாடுகிறார். இதனால்தான் எனக்கு டெஸ்ட் போட்டி பிடிக்கிறது. ஆஸ்திரேலியாவில் புஜாராவின் அருமையான போராட்டக் குணத்தை வெளிப்படுத்தினார். எனக்கு பார்க்க மிகவும் பிடித்திருந்தது.


இவ்வாறு பிளேக் தெரிவித்துள்ளார்.


ஜமைக்காவைச் சேர்ந்த பிளேக் ஒலிம்பிக்கில் இருமுறை தங்கப்பதக்கம் ஓட்டப்பந்தயத்தில் வென்றுள்ளார். தடகள வீரராக இருந்தாலும், கிரிக்கெட் மீது அளவில்லாத ஈர்ப்பு உடையவர் பிளேக் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x