

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு நடராஜன் தேவைப்படுவார் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதையடுத்து, விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று கலக்கிய தமிழக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இடம் பெற்றார். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்தே வாரே ஆஸ்திரேலியாவுக்கு நடராஜன் இந்திய அணியோடு சென்றார்.
ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி20,டெஸ்ட்ஆகிய 3 பிரிவுகளிலும் அறிமுகமாக கலகக்கிய நடராஜன், டி20 கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கியக் காரணமாக அமைந்திருந்தார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றுஇந்திய அணி நாடு திரும்பிய பின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்காக நடராஜனை தேர்வு செய்யும்பொருட்டு அவரை தமிழக அணியிலிலிருந்து விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஒருநாள், டி20 தொடரில் நடராஜனுக்கு இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறுகையில் “ இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பும், இந்திய அணி நிர்வாககமும் எங்களிடம் கோரின.
இதையடுத்து, விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து டி.நடரஜான் விடுவிக்கப்பட்டார். நடராஜனுக்கு பதிலாக ஆர்.எஸ்.ஜெகநாத் சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 13-ம் தேதி தமிழக அணி இந்தூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்” எனத் தெரிவி்த்தார்.
சயீத் முஸ்டாக் அலிக் கோப்பையை சமீபத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, இங்கிலாந்து அணிக்களுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் புனேயிலும், 5 டி20 போட்டிகளும் அகமதாபாத்திலும் நடக்கின்றன.
தமிழக அணியின் தலைமைத் தேர்வாளர் எஸ். வாசுதேவன் கூறுகையில் “ இந்திய அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கினங்க நடராஜன் தமிழக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்”என்று உறுதி செய்தார்.