ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 2வது வெற்றி

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு 2வது வெற்றி
Updated on
1 min read

8வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் குவான்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது 2வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே மலேசியா முதல் கோலை அடித்தது. அடுத்த 10வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த கோலை மன்தீப் சிங் அடித்தார். 25வது நிமிடத்தில் மலேசியா 2வது கோலை அடித்தது. இதனால் அந்த அணி முதல் பாதியில் 2-1 என முன்னிலை வகித்தது. 2வது பாதி ஆட்டம் தொடங்கியதும் மலேசியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

மலேசிய வீரர் அடித்த பந்தை இந்திய அணியின் கோல்கீப்பர் சுராஜ் ஹர்ஹேரா அருமையாக தடுத்தார். அதன் பின்னர் இந்திய வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டனர். குர்ஜாந்த் சிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 2-2 என சமநிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து கேப்டன் ஹர்மான்பிரீத் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி 2 கோல்கள் அடித்தார். இதனால் இந்தியா 4-2 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய 7 நிமிடங்களே இருந்த நிலையில் மன்தீப்சிங் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதற்கு மலேசிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் இந்திய அணி 6 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடம் வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தியிருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி இன்று சீனாவுடன் மோதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in