Last Updated : 08 Feb, 2021 04:43 PM

 

Published : 08 Feb 2021 04:43 PM
Last Updated : 08 Feb 2021 04:43 PM

18 ஆண்டுகளில் முதல்முறை: டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்; ‘சோக்கர்ஸ்’ தெ.ஆப்பிரிக்கா: ஹசன் அலி 10 விக்கெட்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர் : படம் உதவி ட்விட்டர்

ராவல்பிண்டி


வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி இரு இன்னிங்ஸிலும் சேர்த்து வீழ்த்திய 10 விக்கெட்டால், ராவல்பிண்டியில் நடந்த தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகி்ஸ்தான் அணி வெற்றி பெற்றது.

கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 6-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

வெற்றி 243 ரன்கள் கையில் 9 விக்கெட்டுகள் வைத்துக்கொண்டு வலுவான நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி கடைசி நாளான இன்று பாகிஸ்தானின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சோக்கர்ஸ் ஆகி தொடரை இழந்தது.

தென் ஆப்பிரிக்க அணி நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள முடியாமல் சடன் கொலாப்ஸ் ஆவது இது முதல் முறை அல்ல. பல ஒருநாள் தொடர், டி20 தொடரில் இதுபோன்று கோட்டை விட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிவரை வந்து பதற்றத்தில் வெற்றி வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளது.

(ஆங்கிலத்தில் “சோக்கர்ஸ்” என்பது, நெருக்கடியான சூழலை, அழுத்தமான சூழலை சமாளிக்க முடியாமல் தோல்வி அடைந்து, வீழ்ந்துவிடுவதாகும்)

இதற்கு முன் கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியை 1-0 என்றகணக்கில் பாகிஸ்தான் தங்கள் நாட்டில் வைத்து வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதன் பின் 18 ஆண்டுகளாக தெ ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை் கூட அந்த அணியால் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை முதல் முறையாக வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதையும் ஹசன் அலி பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 272 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 201 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற 370 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி. தென் ஆப்பிரி்க்க அணி 91.4 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

4-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்து வலுவாகத்தான் இருந்தது. கையில் 9 விக்கெட்டுகளுடன் வெற்றிக்கு 243ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஆனால், தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம்(108), பவுமா (61), வேன்டர் டூ சென(41) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ஸ்கோர் செய்தனர். மற்ற வீரர்களான எல்கர்(17), டூப்பிளசிஸ்(5), கேப்டன் டீகாக்(0), முல்டர்(20) லிண்டே(4) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

241 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில்தான் தென் ஆப்பிரிக்கா இருந்தது. வெற்றிக்கு 129 ரன்களும்,கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், கடைசி 33 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளையும் இழந்து தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது.

4-வது விக்கெட்டுக்கு பவுமா, மார்க்ரம் 106 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றியின் அருகே கொண்டு சென்றது வீணாகிப் போனது.

பாகிஸ்தான் தரப்பில் முதல் இன்னிங்ஸிலும், 2-வது இன்னிங்ஸிலும் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷீகான்ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x