

சென்னையில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஃபாலோ-ஆனைக் கடப்பதற்கு இன்னும் 42 ரன்கள் தேவைப்பட்டபோதிலும் இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் இங்கிலாந்து அணி தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 578 ரன்களுக்கும், இந்திய அணி 337 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.
3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்திருந்தது.
இங்கிலாந்து அணியின் 578 ரன்களைவிட இன்னும் 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருந்தது. சென்னைவாசிகளான வாஷிங்டன் சந்தர் 33 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் களத்தில் இருந்து இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இந்திய அணிக்கு 122 ரன்கள் தேவைப்பட்டது.
நிதானமாக ஆடிய சுந்தர் 82 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். துணையா ஆடிய அஸ்வின் 31 ரன்னில் லீச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட் கொடுத்து வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதன்பின் வந்த ஷான்பாஸ் நதீம்(0) லீச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இசாந்த் சர்மா(4), பும்ரா0) இருவரும் ஆன்டர்ஸனிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
95.5 ஓவர்களில் 337 ரன்களுக்கு இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமழந்தது. இங்கிலாந்து தரப்பில் பெஸ் 4 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், ஆன்டர்ஸன், லீச் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
241 ரன்கள் முன்னிலை பெற்று ஃபாலோ-ஆன் வழங்காமல் இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது. இன்னும் 64 ஓவர்கள் இருக்கும் நிலையில் இன்று மாலை தேநீர் இடைவேளைக்குப்பின் ஆட்டத்தை இங்கிலாந்து டிக்ளேர் செய்யக்கூடும். மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்து, கடைசி நாளில் இந்தியஅணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வெற்றிக்காக முயற்சிக்கும்.
ஆனால், இங்கிலாந்து அணியின் திட்டம் எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பந்துவீச்சு ஒத்துழைத்தது போல் இந்திய வீரர்களுக்கும் பந்துவீச்சு ஒத்துழைக்கும். விக்கெட்டுகளை விரைவாக இழக்கும் பட்சத்தில் குறைவான இலக்கை இந்தியஅணி சேஸிங் செய்யும் நிலைகூட ஏற்படலாம்.
இ்ங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய உடனே அதிர்ச்சி காத்திருந்தது. ரோரி பர்ன்ஸ், சிப்ளி ஆட்டத்தைத் தொடங்கினர். அஸ்வின் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் பர்ன்ஸ் வெளியேறினார்.