

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் மீட்புப் பணிக்காக தனது போட்டி ஊதியத்தை முழுமையாக அளிப்பதாக இந்திய அணியின் வி்க்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரிஷப் பந்த் , ஹரித்துவார் மாவட்டம் ரூர்கீ நகரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இமயமலைப்பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய அளவில் பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டு பனிச்சரிவு நிகழ்ந்தது. இதனால், சமோலி மாவட்டத்தில் உள்ள அலாக்நந்தா, ரிஷிகங்கா ஆற்றில் ஆற்றில்திடீரென கட்டுக்கடங்கா வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதில் ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே 13.2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம்(தபோவன் அணை) முழுமையாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த மின்திட்டத்தில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதுவரை 16 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்த் உத்தரகாண்ட் மீட்புப் பணிக்காக போட்டியின் ஊதியத்தை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைகிறேன். மாநிலத்தின் மீட்புப்பணிக்காக என்னுடைய போட்டி ஊதியம் அனைத்தையும் வழங்க விரும்புகிறேன். இன்னும் அதிகமான மக்கள் உதவ முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று ரிஷப் பந்த் பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் “ உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவிக்கிறேன். துயரத்தில் இருப்பவர்களை மீட்க மீட்புப்பணி நடக்கிறது என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.