Published : 08 Feb 2021 03:09 AM
Last Updated : 08 Feb 2021 03:09 AM

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2012-க்கு பிறகு சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி: இணையத்தில் இன்று டிக்கெட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இணையதளம் வழியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ம்ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கத்தில் ஐ,ஜே,கே கேலரிகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல்டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண மத்திய, மாநில அரசுகள் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கிய போதிலும் போதிய காலஅவகாசம் இல்லாததால் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதே மைதானத்தில் வரும்13-ம் தேதி இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டிதொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (8-ம் தேதி) காலை 10 மணிக்கு இணையதளத்தில் தொடங்குகிறது. ரசிகர்கள்போட்டிக்கான டிக்கெட்டுகளை www.paytm.com மற்றும் www.insider.in என்ற இணையதளத்திலும் செயலியிலும் சென்று முன்பதிவு செய்யலாம். கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை கிடையாது. 5 நாள் டெஸ்ட்போட்டிக்கான டிக்கெட், நாள் ஒன்றுக்கு ரூ.100, ரூ.150, ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பெறப்படும் ரசீதைக் கொண்டு 11-ம் தேதி விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் இருக்கும் பூத்தில் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறலாம். டிக்கெட்டுகளை பெறவரும் ரசிகர்கள் தனி மனிதஇடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

3 கேலரிகளில் அனுமதி

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண சுமார் 10 முதல் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. 2011-ம் ஆண்டுஉலகக் கோப்பைக்கு பிறகு இந்த 3 கேரிகளையும் திறப்பதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது.

விதிவிலக்காக 2012-ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஒரு நாள் போட்டிக்காக இந்த 3 கேலரிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் இந்த கேலரிகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டம் ஆகியவை நடத்த முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x