Published : 07 Feb 2021 18:57 pm

Updated : 07 Feb 2021 19:02 pm

 

Published : 07 Feb 2021 06:57 PM
Last Updated : 07 Feb 2021 07:02 PM

ஃபாலோ-ஆனைத் தவிர்க்குமா இந்திய அணி? பந்த்-புஜாரா ஜோடி மிரட்டல்: வெற்றியை நோக்கி நகரும் இங்கிலாந்து

england-take-control-after-sizzling-pant-calm-pujara-s-counter-attacking-stand
இந்திய அணியை இக்கட்டான நிலையிலிருந்து காத்த ரிஷப் பந்த், புஜாராகூட்டணி : படம் உதவி ட்விட்டர்

சென்னை


வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதற்காக டெஸ்ட் போட்டி தொடங்கிய 3 நாளிலேயே இங்கிலாந்து அணியை இப்படி நன்றாக வாழவைக்கிறதே...!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ-ஆனைத் தவிர்க்கப் போராடி வருகிறது.


ரிஷப்பந்த், புஜாராவின் அற்புதமான கூட்டணி ஆட்டம் போட்டியை திசைமாற்றி கொண்டு சென்ற நேரத்தில் இருவரும் ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டம் இப்போது இங்கிலாந்து அணியின் கைகளுக்குச் சென்றுவிட்டது.

3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணியின் 578 ரன்களைவிட இன்னும் 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது.

சென்னைவாசிகளான வாஷிங்டன் சந்தர் 33 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் களத்தில் உள்ளனர். ஃபாலோ-ஆனைத் தவிர்க்க இந்திய அணிக்கு 122 ரன்கள் தேவைப்படுகிறது.

ஆனால் சுந்தர், அஸ்வின் இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலே அடுத்து களத்தில் நிலைத்து நிற்க பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதால், நெருக்கடியான கட்டத்தில் இந்திய அணி இருக்கிறது.
இன்னும் இருநாட்கள் 6 செஷன்கள் இருக்கின்றன. ஆடுகளம் இனிமேல் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணி நாளை விக்கெட் வீழாமல் தாக்குப்பிடிக்குமா என்பது சந்தேகம்தான்.

அதேநேரத்தில் இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்தியஅணிக்கு ஃபாலோ-ஆன் வழங்கும் துணிச்சலான முடிவை எடுக்குமா அல்லது தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை பேட் செய்து மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்குமா என நாளைத் தெரிந்துவிடும்.

நாளை உணவு இடைவேளைக்குள் இந்திய அணி ஆட்டமிழந்துவிட்டால், நிச்சயம் இங்கிலாந்து அணி ஃபாலோ-ஆன் வழங்கி தொடர்ந்து பேட் செய்து, இலக்கு நிர்ணயித்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்கும் என நம்பலாம்.

இந்திய் அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா(4), விராட் கோலி(11), ரஹானே(1), கில்(29) என விரைவாக விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

ஆனால், 5-வது விக்கெட்டுக்கு புஜாரா, ரிஷப்பந்த் கூட்டணி 119 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப்பந்த் 88 பந்துகளில் 91 ரன்கள்(5சிக்ஸர்,9பவுண்டரி) சேர்த்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கடந்த 3 போட்டிகளில் ரிஷப்பந்த் 3-வது முறையாக சதத்தை தவறவிட்டுள்ளார்.

இதில் பிரிஸ்பேன் டெஸ்டில் 89ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தால், சிட்னியில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். உறுதுணையாக ஆடிய அணியின் சுவர் புஜாரா 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதிலும் ரிஷப்ந்த் டெஸ்ட் போட்டி எனக் கருதாமல் அனாசயமாக ஆடி ரன்களைச் சேர்த்தார். குறிப்பாக 5 இமாலய சிக்ஸர்களை அடித்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களையும், பீல்டர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தினார். லாங்-ஆன், டீப் மிட்விக்கெட் என சிக்ஸர்களை வெளுத்து வாங்கி 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்திய அணியின் சரிவுக்கு ஜோப்ரா ஆர்ச்சர், டாம் பெஸ் இருவர்தான் முக்கியக் காரணமாகஅமைந்தனர். இந்திய மண்ணில் முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் இருவரையும் வெளியேற்றி இங்கிலாந்து அணிக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தார்.

அதன்பின் அனுபவமற்ற டாம் பெஸ் பந்துவீச்சை எளிதாக எடுத்துக்கொண்டு ஆடிய கேப்டன் கோலி 11 ரன்னில் ஷார்ட் லெக் திசையில் போப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராஹேனே வந்தவேகத்தில் பெஸ் சுழற்பந்துவீச்சில் ரூட்டிடம் ஷார்ட் கவர் திசையில் கேட்ச் கொடுத்தார்.

வாஷிங்டன் சுந்தரும், அஸ்வினும் எந்த அளவு தாக்குப் பிடிக்கப் போகிறார்கள் என்பதைப் பொருத்துதான் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவு செய்யப்படும். பாலோ-ஆனைத் தவிர்க்குமா என்பது மதில்மேல் பூனையாக இருக்கிறது.

முன்னதாக, 2-வது நாளான நேற்றைய ஆட்டம் நேரமுடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் சேர்த்திருந்தது. டாம் பெஸ் 28 ரன்னிலும், லீச் 6 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆட்டம் தொடங்கி 10 ஓவர்கள் மட்டுமே நிலைத்திருந்த இங்கிலாந்து டெய்ல்என்டர்கள் கூடுதலாக 23 ரன்கள்சேர்த்து மீதமிருந்த இரு விக்கெட்டுகளையும் இழந்தனர். பும்ரா பந்துவீச்சில் டாம் பெஸ் 34 ரன்கள் சேர்த்த நிலையில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

அஸ்வின் பந்துவீச்சில், ஆன்டர்ஸன் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 190.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், இசாந்த், நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்


தவறவிடாதீர்!

PujaraSizzling PantEngland take controlEngland gunning for victoryRishabh Pantசென்னை டெஸ்ட்இங்கிலாந்து அணிடாம் பெஸ்ஜோப்ரா ஆர்ச்சர்வெற்றியை நோக்கி இங்கிலாந்துபாலோஆனைத் தவிர்க்குமா இந்தியாரிஷப் பந்த் அருமைபுஜாரா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x