

இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தேர்வு செய்யாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்கஆட்டக்காரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில்நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு சோதனைக் களமாகஅமைந்தது. ஏறக்குறைய 190.1 ஓவர்களை இந்தியப் பந்துவீ்ச்சாளர்கள் பந்துவீசியுள்ளார்கள். இதில் அஸ்வின், பும்ரா மட்டுமே, 91 ஓவர்களை வீசியுள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காத உணர்வற்ற, செத்த ஆடுகளமாக சேப்பாக்கம் ஆடுகளம் அமைந்திருக்கிறது. இந்த ஆடுகளத்தில் பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதற்குள் இந்திய வீரர்கள் பெரும் சிரமப்பட்டனர். அதிலும் பும்ரா மட்டும் 36ஓவர்கள் வீசி 84 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அஸ்வின் 55 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை அணியில் தேர்வு செய்யக்கூடாது அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என கவுதம்கம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கிரிக்இன்போ சேனலுக்கு கவுதம் கம்பீர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திறனுக்கும் அதிகமாகப் பந்துவீசிவிட்டார்கள். அதிலும் பும்ராவின் பணி அடுத்துவரும் போட்டிகளுக்கு முக்கியமாகத் தேவை. அதற்காக பும்ராவை நாம் பாதுகாக்க வேண்டும்.
அகமதாபாத்தில் வரும் 24-ம் தேதி நடக்கும் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு முக்கியத் துருப்புச் சீட்டாக இருக்கும். ஆதலால், சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவை விளையாடும் 11பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யக்கூடாது.
என்னைப் பொறுத்தவரை பும்ராவுக்கு அதிகமான ஓவர்களைக் கொடுத்து பந்துவீசச் செய்யக்கூடாது. குறைந்தபட்சம் 3 ஓவர்களை வீசச்செய்து, விக்கெட்டுகளை வீழ்த்துமாறு செய்ய வேண்டும்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா முக்கியமான துருப்புச்சீட்டாக இருக்கப் போகிறார் என்பதால் அவருக்கு பணி அதிகமாகக் கொடுக்கக்கூடாது. ஒருவேளை நீண்ட ஓவர்கள் வீசி பும்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டால், இந்தத் தொடர் இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக மாறும்
இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.