பயிற்சியைத் தொடங்கினார்;3-வதுடெஸ்டில் முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு

முகமது ஷமி : கோப்புப்படம்
முகமது ஷமி : கோப்புப்படம்
Updated on
1 min read


இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இடம் பெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியின்போது அந்நாட்டு அணி வீரர் கம்மின்ஸ் வீசிய பந்து ஷமியின் மணிக்கட்டில் பட்டது. இதில் ஷமியின் மணிக்கட்டில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடலிருந்து முகமது ஷமி நீக்கப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், முதல் 2 போட்டிகளுக்கான அணி வீரர்கள் பட்டியலிலும் முகமது ஷமி பெயர் இடம் பெறவில்லை. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த ஷமி காயத்திலிருந்து குணமடைந்தார்.. தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்து ஷமி பயிற்சி பெற்று வருகிறார்.

தேசிய கிரிக்கெட் அகாடெமியில் நவ்தீப் ஷைனியுடன் இணைந்து முகமது ஷமி பந்துவீசிப் பயிற்சி பெறும் வீடியோவே ஷமி தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நவ்தீப் ஷைனி தொடையில் தசைப்பிடிப்பு காரணமாக பிரிஸ்பேன் டெஸ்டில் பாதியிலேயே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷமியின் உடல்நிலை குறித்து தேசிய கிரிக்கெட் அகாடெமி வட்டாரங்கள் கூறுகையில் “ முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம் குணமடைந்து நலமுடன் உள்ளார். அடுத்த சில நாட்களுக்கு மெதுவாகப் பந்துவீசி பயிற்சி எடுப்பார். நாள்தோறும் 60 சதவீத முயற்சியுடன் 3 ஓவர்கள் வரை பந்துவீச அறிவுறுத்தியுள்ளோம். படிப்படியாக இந்த பந்துவீச்சுப் பயிற்சி அதிகரிக்கப்படும்.

அடுத்தவாரத்திலிருந்து முழுமையாக பயிற்சி ஷமிக்கு தொடங்கும். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் ஷமியின் பெயர் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் தேர்வு செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக பிங்க் பந்துடெஸ்ட் போட்டிக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் உள்ளதால் அதற்குள் ஷமி குணமடைந்துவிடுவார். ஷமியின் பந்துவீச்சில் எந்தவிதமானக் குறைபாடும் இல்லை. விரைவில் இயல்பான வேகத்தில் பந்துவீசும் திறனை ஷமி பெற்றுவிடுவார் ” எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in