Last Updated : 07 Feb, 2021 03:13 AM

 

Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: புதிய வரலாறு படைத்த கும்ப்ளே

டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே சாதனை படைத்த நாள் இன்று (பிப்ரவரி 7).

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் அசைக்க முடியாத இந்த சாதனையைப் படைத்தார் அனில் கும்ப்ளே. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்றிருந்தது. இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி ஆட வந்தபோது, வெற்றிபெற 420 ரன்களை எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்க ஜோடியான சயீத் அன்வரும், அப்ரிடியும் 100 ரன்களைக் கடந்து முன்னேறிக் கொண்டிருந்தனர்.

இந்த இன்னிங்ஸின் தொடக்கத்தில் புட்பால் ஸ்டாண்ட் முனையில் பந்துவீசிய அனில் கும்ப்ளே, 6 ஓவர்களில் விக்கெட் எதையும் எடுக்காமல் 27 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இந்தச் சூழலில் பாகிஸ்தானின் தொடக்க ஜோடியைப் பிரிக்கும் முயற்சியாக பெவிலியன் முனையில் இருந்து கும்ப்ளேவை பந்துவீச வைத்தார் கேப்டன் அசாருதீன். இது பலன் கொடுத்தது. உறுதியாக ஆடிக்கொண்டிருந்த அப்ரிடியின் விக்கெட்டை முதலில் கொய்த கும்ப்ளே, அடுத்தடுத்து இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக், முகமது யூசுப் ஆகியோரின் விக்கெட்களைத் தெறிக்கவிட்டார். ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பத் தொடங்கியது.

முதல் 6 விக்கெட்களையும் கைப்பற்றிய நிலையில்தான், 10 விக்கெட்களையும் தன்னால் எடுக்க முடியும் என்ற எண்ணம் கும்ப்ளேவுக்கு வந்தது. இந்தச் சூழலில் மற்ற பந்துவீச்சாளர்களும் வேண்டுமென்றே விக்கெட் வீழ்த்தாமல் கும்ப்ளேவின் சாதனைக்காக தோள்கொடுக்கத் தொடங்கினர். இறுதியில் 74 ரன்களை மட்டுமே கொடுத்து பாகிஸ்தானின் 10 விக்கெட்களையும் விழுங்கினார் அனில் கும்ப்ளே. கிரிக்கெட் உள்ள காலம் வரை தனது புகழ் நிலைக்கும் அளவுக்கு வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x