Last Updated : 04 Feb, 2021 06:44 PM

 

Published : 04 Feb 2021 06:44 PM
Last Updated : 04 Feb 2021 06:44 PM

மறக்க முடியாத புள்ளிவிவரங்கள்: சென்னையின் பெருமை தெரியுமா? 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றி; 35 ஆண்டுகளில் ஒரு தொடரை வென்ற இங்கி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் கேப்டன் விராட் கோலி : படம் உதவி | ட்விட்டர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. கடந்த 1933-ம் ஆண்டிலிருந்து இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடி வருகின்றன.

  • வெளிநாடு, உள்நாடு என இரு அணிகளும் இதுவரை 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 26 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், 47 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. 49 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
  • இரு அணிகளும் சேர்ந்து 32 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 18 டெஸ்ட் தொடர்களையும், இந்திய அணி 10 தொடர்களையும் வென்றுள்ளன. 4 டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்துள்ளன.
  • முதன் முதலில் இங்கிலாந்து அணியுடன் கடந்த 1932-33ஆம் ஆண்டில் இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தியது. அதன்பின் இந்திய அணி 20 ஆண்டுகள் இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியும் ஒரு வெற்றிகூட பெற முடியவில்லை.
  • 20 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 1952-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
  • 2-வது வெற்றியை இங்கிலாந்துக்கு எதிராகப் பதிவு செய்ய 10 ஆண்டுகள் இந்தியா காத்திருந்தது. 1962-ம் ஆண்டு கொல்கத்தாவிலும்,சென்னையிலும் டெஸ்ட் போட்டியை வென்று இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
  • இங்கிலாந்து அணி கடந்த 1984-85ஆம் ஆண்டு இந்தியா வந்திருந்து டெஸ்ட் தொடரை வென்றபின், ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2012-13ஆம் ஆண்டில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பின் 7 ஆண்டுகளாக எந்தத் தொடரையும் வெல்லவில்லை. ஏறக்குறைய 35 ஆண்டுகளில் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை மட்டுமே இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை இரு அணிகளும் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி மட்டும் 19 டெஸ்ட் போட்டிகளில் வென்று, 7 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டிகளில் வென்று 5 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது
  • கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2010-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை இரு அணிகளும் 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து 13 வெற்றிகளும், இந்திய அணி 7 வெற்றிகளும் பெற்றுள்ளன. 3 ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
  • சென்னை மைதானத்துக்கு ஒரு பெருமை இருக்கிறது. இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இதுவரை இங்கிலாந்து, இந்திய அணிகள் 9 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், இந்திய அணி 4 போட்டிகளிலும் வென்றுள்ளன.
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 16-20ஆம் தேதிகளில் டெஸ்ட் போட்டி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. அதன்பின் கடந்த4ஆண்டுகளுக்குப் பின் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டி நாளை நடக்கும் போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x