Published : 12 Nov 2015 11:37 AM
Last Updated : 12 Nov 2015 11:37 AM

கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ்: சச்சின் பிளாஸ்டர்ஸை வீழ்த்தி வார்ன் அணி தொடரை வென்றது

ஹூஸ்டனில் நடைபெற்ற கிரிக்கெட் ஆல்ஸ்டார்ஸ் 2-வது டி 20 போட்டியில் 20 ஓவர்களில் 262 ரன்கள் குவித்த வார்ன் வாரியர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி வார்ன் வாரியர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தது. சச்சின் அணியில் மெக்ரா, அக்தர், போலாக், கிரேன் ஸ்வான், லான்ஸ் குளூஸ்னர், முரளிதரன், சேவாக், டெண்டுல்கர், கங்குலி, லாரா, ஜெயவர்தனே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

முதலில் களமிறங்கிய வார்ன் வாரியர்ஸ் அணியில் மைக்கேல் வான், மேத்யூ ஹெய்டன் தொடக்கத்தில் களமிறங்கினர். கடந்த ஆட்டத்தை விட இந்த ஆட்டம் இன்னும் ஜாலியாக ஆடப்பட்டதால் வார்ன் வாரியர்ஸ் அணி மொத்தம் 21 சிக்சர்களையும், 22 பவுண்டரிகளையும் அடிக்க 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் குவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது இதன் மூலம் தொடரை வார்ன் வாரியர்ஸ் வென்றது. சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி 18 சிக்சர்களையும், 10 பவுண்டரிகளையும் அடித்தனர். மொத்தம் இந்த ஆட்டத்தில் 39 சிக்சர்கள் 32 பவுண்டரி விளாசப்பட்டது.

வார்ன் வாரியர்ஸ் அணியில் மைக்கேல் வான் (30), ஹெய்டன் (32) இணைந்து 34 பந்துகளில் 51 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஏற்கெனவே மெக்ரா தன் பந்தில் வானுக்கு ஒரு கேட்சை தவற விட கடைசியில் வான், கிரேம் ஸ்வான் பந்தில் எல்.பி.ஆனார். ஷோயப் அக்தர் பந்து வீச்சும் விளாசப்பட்டது.

மேத்யூ ஹெய்டன் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து மெக்ராவின் பந்தை கட் செய்ய முயன்று பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

காலிஸ், சங்கக்காரா ஜோடி அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. 7 ஓவர்களில் 91 ரன்கள் விளாச்ப்பட்டது. காலிஸ் 23 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்து சேவாக் பந்தில் முரளியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சேவாக் ஒரு ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார். சங்கக்காரா 30 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாசி, குளூஸ்னர் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடித்து அக்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரிக்கி பாண்டிங் களமிறங்கி தன் பங்குக்கு 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்தார். இவரும் குளூஸ்னரிடம் விக்கெட் கீப்பர் ஜெயவர்தனேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி 7 ஓவர்களில் 108 ரன்கள் நொறுக்கப்பட்டதில் சைமண்ட்ஸ் 6 பந்தில் 19 ரன்களையும், ஜாண்டி ரோட்ஸ் 8 பந்துகளில் 18 ரன்களையும் அடித்தனர். ஸ்கோர் 262/5.

சேவாக் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் அகார்கர் பந்தில் பவுல்டு ஆனார். ஏறக்குறைய மெக்ரா, ஹெய்டனை வீழ்த்தியதன் வலது கை மறு ஒலிபரப்பே இந்த அவுட், வெளியே சென்ற பந்தை கட் செய்ய முயன்று பிளேய்ட் ஆன் ஆனார் சேவாக்.

சச்சின் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசி, சக்லைன் முஷ்டாக் வீசிய தூஸ்ரா எதிர் திசையில் திரும்பாமல் நேராகவே செல்ல ஒதுங்கிக் கொண்டு ஆட முயன்ற சச்சின் மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. முன்னதாக கங்குலி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியை அடுத்தடுத்து அடித்து ஆரவாரம் காட்டினார் கடைசியில் சில பந்துகள் சிக்காமல் காற்று வர 12 பந்துகளில் 12 ரன்களில் காலிஸ் பந்தில் வெளியேறினார்.

ஜெயவர்தனே (5), லாரா (19), குளூஸ்னர் (21) ஆகியோர் ஆகியோர் இன்னிங்ஸை தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியாமல் சைமண்ட்ஸ், சக்லைனிடம் ஆட்டமிழக்க 16-வது ஓவரில் 130/6 என்று ஆனது சச்சின் பிளாஸ்டர்ஸ். கடைசியில் ஷான் போலக்கின் பேட்டிங் உண்மையில் ரசிகர்களின் ஆரவாடத்தைக் கூட்டிய இன்னிங்ஸ் ஆகும். 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 55 ரன்களை விளாசினார் போலக். ஸ்வா 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். முரளிதரன் கடைசி பந்தை சைமண்ட்ஸை சிக்ஸ் அடித்து நிறைவு செய்தார். சச்சின் அணி 205/8 என்று முடிந்தது. தொடரை வார்ன் அணி வென்றது. ஆட்ட நாயகனாக சங்கக்காரா தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த போட்டியில் வாசிம் அக்ரம் சிக்கனம் காட்டினர். ஆனால் இம்முறை 4 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்தார். சக்லைன் முஷ்டாக் அபாரமாக வீசி 3 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x