

இந்தியாவின் முன்னணி ஓட்ட வீராங்கனைகளில் ஒருவரான டுட்டி சந்த்தின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 3).
1996-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் எனும் ஊரில், ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் டுட்டி சந்த் பிறந்தார். அவரது பெற்றோருக்கு மொத்தம் 7 குழந்தைகள். இதில் டுட்டி சந்த் 3-வது குழந்தையாவார். டுட்டி சந்த்தின் அக்கா சரஸ்வதி சந்த், உள்ளூரில் சிறந்த ஓட்ட வீராங்கனையாக இருந்தார். இதனால் அவருக்கு 2005-ம் ஆண்டில் ஒடிசா காவல் துறையில் வேலை கிடைத்தது.
இதைப் பார்த்த டுட்டி சந்த், அக்காவைப் போல தனக்கு அரசு வேலை கிடைத்தால், குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்பதால் சிறு வயது முதலே பயிற்சிகளில் ஈடுபட்டார்.
தேசிய அளவில் டுட்டி சந்த் புகழ்பெற்றது 2012-ம் ஆண்டில்தான். இந்த ஆண்டில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 11.8 விநாடிகளில் கடந்து டுட்டி சந்த் சாதனை படைத்தார். இதைத்தொடர்ந்து பி.டி.உஷாவுக்கு அடுத்ததாக 100 மீட்டர் ஓட்டத்தில், இந்தியாவுக்கு சிறந்த வீராங்கனை கிடைத்ததாக பத்திரிகைகள் இவரைப் புகழ்ந்து எழுதின. இதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டில் உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் டுட்டி சந்த், இறுதிச் சுற்றை எட்டினார். இதன்மூலம் இப்போட்டியின் இறுதிச் சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த சூழலில் அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன்கள் அதிகம் இருப்பதாகக் கூறி, பெண்களுக்கான பிரிவில் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, தனக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றார். 2018-ம்ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற அவர், தற்போது ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.