

ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா ஒரே ஓவரில் 32 ரன்கள் விளாசினார்.
ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி-கர்நாடகா அணிகள் இடையேயான ஆட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த கர்நாடக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. ராபின் உத்தப்பா 148, மயங்க் அகர்வால் 118 ரன் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் உத்தப்பா 95 ரன்களில் இருந்தபோது துருவ் ஷோரே வீசிய ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் உத்தப்பா அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.
மேலும் ஒட்டுமொத்தமாக 17வது சதமாக அமைந்தது. இதன் மூலம் ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தை டிராவிட்டுடன் பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் பிரிஜேஷ் படேல் 26 சதங்களுடன் உள்ளார்.
மழையால் ரத்து
தமிழ்நாடு-குஜராத் அணிகள் இடையேயான ஆட்டம் திரு நெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.