

நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்துள்ளது.
புஜாரா 18 ரன்களுடனும் கேப்டன் கோலி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முரளி விஜய் 40 ரன்கள் எடுத்து மோர்னி மோர்கெல் வீசிய அருமையான புல் லெந்த் ஸ்விங் பந்துக்கு நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி ஆகி வெளியேறினார்.
ஷிகர் தவண் 12 ரன்கள் எடுத்து மீண்டும் ஒரு முறை சொதப்பி டீன் எல்கர் பந்தை சற்றே மேலேறி வந்து ஆட முயன்றார் ஆனால் பந்து சரியாக சிக்கவில்லை தவணின் அணுகுமுறையும் சரியாக அமையவில்லை இதனையடுத்து மட்டையின் உட்புறத்தில் பட்டு எல்கரிடமே கேட்ச் ஆனது. அவர் அதனை நன்றாகப் பிடித்தார்.
முரளி விஜய் அருமையான மற்றொரு டெஸ்ட் இன்னிங்ஸுக்கு அடித்தளம் அமைத்த நிலையில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்திருந்த போது மோர்னி மோர்கெல் அருமையாக ஸ்டம்ப் லைனில் ஒரு பந்தை சற்றே ஸ்விங் செய்ய முழுதும் ஏமாந்தார் விஜய் பந்து கால்காப்பை தாக்கியது, அவுட் என்றார் நடுவர்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார்.3 ஸ்பின்னர்கள் விளையாடுகின்றனர். ஜடேஜா, அஸ்வின், மிஸ்ரா, இவர்களுடன் இசாந்த் சர்மா.
2 மணி நேர ஆட்டத்தில் ஸ்பின்னர் தனது முதல் ஓவரை வீசும் போது முதல் பந்தே பயங்கரமாகத் திரும்பி எழும்பியது. நிச்சயம் தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய சவால்தான். கொஞ்சம் வேகம் மட்டும் இருந்தால் இது ஆடலாயக்கில்லாத ஒரு பிட்ச்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.