

கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதி்க்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
இம்மாதம் 2-ம் தேதி கங்குலிக்கு முதல்முறையாக லேசான மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த அடைப்புகள் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி சிகிச்சை முடிந்து கங்குலி வீடுதிரும்பினார்.
இந்நிலையில் 2-வது முறையாக கங்குலிக்கு லேசான நெஞ்சு வலி கடந்த 27-ம் தேதி ஏற்பட்டது.இதையடுத்து, கடந்த 28-ம் தேதி அப்போல்லோ மருத்துவர்கள், கங்குலியின் இதயத்தில் ரத்தக் குழாயில் கூடுதலாக இரு ஸ்டென்ட்களை பொருத்தினர். தொடர்ந்து இருநாட்கள் கண்காணித்ததில் கங்குலி உடல்நிலை சீராக இருந்தால்து இன்று மருத்துவமனையில் இருந்து கங்குலி வீடு திரும்பினார்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை மூத்த மருத்துவர் அஸ்வின் மேத்தா கூறுகையில் “ கங்குலி தற்போது நலமுடன் இருக்கிறார். அவரின் இதயமும் சீராக இயங்குகிறது. அடுத்த சிலநாட்களில் கங்குலி வழக்கமானப் பணிகளை கவனிக்கலாம். அவரின் உடல்நிலையில் இனி பிரச்சினையில்லை. அடுத்த சில மாதங்களுக்கு தீவிரமான மருத்துவக் கட்டுப்பாடுகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளோம்”எ னத் தெரிவித்தார்.