

நியூஸிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய டி20 அணியில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள 19 வயது வீரர் தன்வீர் சங்கா இடம் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவை பூர்வமாக கொண்டிருக்கும் பஞ்சாப் விவசாயி மகன் தன்வீர் சங்காவும் இடம்பெறு இருக்கிறார்.
தன்வீர் சங்காவின் தந்தையின் பெயர் ஜோகா சிங். இவர் பஞ்சாபில், ஜலந்தர் அருகே ராஹிம்பூர் காலா சாங்கியான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். தீவிரமான விவசாயம் குடும்பத்தைச் சேர்ந்த ஜோகா சிங் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தநிலையில், கடந்த 1997-ல் பஞ்சாபில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். சிட்னியில் தற்போது ஜோகா சிங் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். தன்வீர் சங்காவின் தாய் உபநீத், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றது குறித்து தன்வீர் சங்கா கூறுகையில் “ஆஸ்திரேலியா அணியில் நான் இடம்பெற்று இருக்கும் செய்தியை கேட்டவுடன் நான் நிலவில் இருப்பதாகவே உணர்ந்தேன், நான் நம்பவே இல்லை. ஆனால் 19 வயதில் சர்வதேச அணியில் விளையாடுவதெல்லாம் ஒரு வரம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பாஷ் டி20 லீக்கில் சிட்னி தண்டர் அணியில் இடம் பெற்றுள்ள லெக் ஸ்பின்னர் தன்வீர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 19வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைப் போட்டியில் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமையும் பெற்றுள்ளார்.