ஐசிசி டெஸ்ட்தரவரிசை: பாபர் ஆசத்தை பின்னுக்குத் தள்ளிய புஜாரா; ரஹானே முன்னேற்றம்

சத்தேஸ்வர் புஜாரா : கோப்புப்படம்
சத்தேஸ்வர் புஜாரா : கோப்புப்படம்
Updated on
1 min read


சர்வதேச கிரி்க்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசத்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளனர்.

மெதுவாக பேட்டிங் செய்கிறார், ரன் அடிக்கவே யோசிக்கிறார் என்று புஜாரா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மலையாக இருந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதில் முக்கியமானவர் புஜாரா.

கடைசி டெஸ்டில் உடலில் பல்வேறு இடங்களில் ஆஸி.பந்துவீச்சாளர்களின் பாடிலைன் பந்துவீச்சில் அடிவாங்கி, அரைசதம் அடித்தார் புஜாரா.

இந்திய அணியில் போர் வீரர் போல் பேட்டிங் செய்த புஜாரா ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 760 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் பாபர் ஆசத்தை(755)பின்னுக்குத்(7-வது இடம்) தள்ளிவிட்டார்.

அதேபோல பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் கேப்டனுக்குரிய பொறுப்புடன், ரிஷாப்பந்துக்கு ஒத்துழைத்து ஆடி 24 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த ரஹானே, தரவரிசையில் ஒருஇடம் முன்னேறி 748 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். விராட் கோலி 4-வது இடத்தில் நீடிக்கிறார். ரிஷப் பந்த் 13-வது இடத்திலும், ரோஹித் சர்மா 18-வதுஇடத்திலும் நீடிக்கின்றனர்.

முதல் 5 இடங்களில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன்(919), ஸ்டீவ் ஸ்மித்(891), லாபுஷேன்(878), விராட் கோலி (862), ஜோ ரூட்(823) என 5 இடங்களில் மாற்றமில்லாமல் தொடர்கின்றனர்.
பிப்ரவரி 5ம் தேதி தொடங்கும் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்குப்பின் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பலமாற்றங்கள் உருவாகும்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீர்ர அஸ்வின், பும்ரா முறையே 8-வது ,மற்றும் 9-வது இடத்தில் நீடிக்கின்றனர். இங்கிலாந்த வீரர் ஆன்டர்ஸன் 6-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் நீடிக்கிறார், அதைத்தொடர்ந்து இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், நியூஸிலாந்தின் நீல் வாக்னர் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையி்ல் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 419 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், 281 புள்ளிகளுடன் ரவிச்சந்திர அஸ்வின் 8-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 427 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in