

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தாலும், தனது மகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, ஆஸி. பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நன்றி கூறியுள்ளார்.
டேவிட் வார்னரின் மகள் இன்டி ரா, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிரமான ரசிகை. சமீபத்தில் டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ், சிட்னி வானொலி நிலையத்துக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் “ எங்களின் 2-வது மகள் இன்டி ரா, தீவிரமான கிரிக்கெட் ரசிகை. அதிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிரமான ரசிகை. சில நேரங்களில் தந்தையுடனும், சில ேநரங்களில் ஆரோன் பிஞ்ச்சுடனும் விளையாட இன்டி ரா ஆசைப்பட்டாலும், விராட் கோலியுடன் கிரிக்கெட் விளையாட அவருக்கு ஆசை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்துக்காக தாயகம் திரும்பிவி்ட்டார். தாயகம் செல்லும்போது விராட் கோலி, டேவிட் வார்னர் மகள் இன்டி ராவுக்கு தனது ஜெர்ஸியில் கையொப்பமிட்டு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
இதைப் பற்றி தெரிவிக்காமல் இருந்த டேவிட் வார்னர், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி்க்கு நன்றி தெரிவித்து, அந்த ஜெர்ஸியை தனது மகள் அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், “நாங்கள் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்துவிட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும்.ஆனால், இ்ங்கு, எங்களிடம் ஒரு மகழ்ச்சியான பெண் இருக்கிறார். தான் அணியும் ஜெர்ஸியை என் மகளுக்கு வழங்கிய விராட் கோலிக்கு நன்றி. எனது மகள் கோலியின் ஜெர்ஸியை முழுமையாக விரும்புகிறார். என்னையும், பிஞ்சையும் தவிர்த்து, கோலியை அதிகமாகப் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றபின், இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை ஆஸி. வீரர் நாதன் லேயானுக்கு கேப்டன் ரஹானே வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி நாதன் லேயனுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும் அதன் நினைவாக ஜெர்ஸியை ரஹானே வழங்கினார்.