

‘மாஸ்டர்’ படத்தைப் பாருங்கள் என்று இந்திய வீரர் ரஹானேவுக்கு, சக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரை செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகரமான ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக உள்நாட்டில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வீரர்கள் சென்னை வந்திறங்கியுள்ளனர். வலைப் பயிற்சி ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் இருப்பதால் இந்திய அணியினர் அவரவரது குடும்பங்களுடன் நேரம் செலவிட்டு, ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் உரையாடியும் வருகின்றனர்.
அப்படிச் சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் தலைமை வகித்த ரஹானே, ரசிகர்களிடம் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் உரையாட ஆரம்பித்தார்.
அப்போது ஒரு ரசிகர், "சென்னைக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதாவது தமிழ்த் திரைப்படம், தொடரைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரஹானே, "ஆம், ‘சூரரைப் போற்று’ படத்தை சப்டைட்டில் உதவியுடன் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. நடிகர் சூர்யா அற்புதமாக நடித்திருந்தார். இதைச் சொல்லும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. வேறு ஏதாவது திரைப்படப் பரிந்துரை இருக்கிறதா அஸ்வின்?" என்று கேட்டார்.
இதற்கு அஸ்வின், 'நீங்கள் ஏன் ‘மாஸ்டர்’ பார்க்கக் கூடாது?' என்று பரிந்துரை செய்தார்.
இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, தமிழ்த் திரைப்படங்களைச் சக வீரர்களுக்கு அறிமுகம் செய்வதால் பலரும் அஸ்வினைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.