

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியை டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேளிக்கை வரி பாக்கியான ரூ.24 கோடியை 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று டெல்லி மாநில அரசு, டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
இந்தகுழு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாட்டை முடக்கி வைக்க வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அளித்தது. இதனால் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-வது டெஸ்ட் டெல்லியில் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் போட்டியை நடத்த டெல்லி பெரோஸா கோட்லா மைதானத்துக்கு தற்காலிகப் பயன்பாட்டுச் சான்றிதழ் வழங்க தெற்கு டெல்லி நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம் போட்டி நடத்த தற்காலிக அனுமதி வழங்குமாறு தெற்கு டெல்லி நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் டெஸ்ட் போட்டியைக் கண்காணிக்க முன்னாள் நீதிபதி முத்கலையும் நியமித்துள்ளது.
இதனால் திட்டமிட்டபடி 4-வது டெஸ்ட் டெல்லியில் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.