Last Updated : 11 Nov, 2015 02:44 PM

 

Published : 11 Nov 2015 02:44 PM
Last Updated : 11 Nov 2015 02:44 PM

பந்துகள் அதிவேகத்துடன் எகிறும் பிட்ச்: பெர்த்தில் தயாரிப்பு

உலகின் அதிவேக பிட்ச் என்று கருதப்படும் பெர்த் இடையில் சில காலங்கள் அதன் மரபான வேகத்தையும், எகிறு பந்தையும் இழந்திருந்தது. ஆனால் தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு பழைய அதிவேக பிட்ச் பெர்த்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக பெர்த்தில் நடைபெற்ற 8 டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு தெரிந்துள்ளது. இதில் ஆஸ்திரேலியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக பழைய அதிவேக பெர்த் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மைதானத்தின் பிட்ச் தயாரிப்பாளர் மாட் பேஜ் கூறும்போது, “பழைய காலங்களை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடன் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் வேகப்பந்து வீச்சு இதில் சற்று மாறுபட்டவாறு இருக்கும்” என்றார்.

முன்பு வேகத்துக்கும் பந்துகள் எகிறுவதற்கும் சாதகமாக இருந்த களிமண்ணைக் கொண்டு இந்தப் பிட்ச் தற்போது மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.

மிட்செல் ஜான்சன் பெர்த் பிட்சில் மட்டும் 6 டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளை 20.19 என்ற சராசரியுடன் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2008-ம் ஆண்டு 61 ரன்களுக்குக் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் அடங்கும். ஏற்கெனவே பிரிஸ்பனில் தோல்வியடைந்துள்ள நியூஸிலாந்து அணிக்கு பெர்த் பிட்ச் மேலும் சவால் அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேட் ஹென்றி, நீல் வேக்னர் ஆகியோர் தற்போது பெர்த்திற்காக சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் டிரெண்ட் போல்ட்டின் இடது கை ஸ்விங் பந்து வீச்சு ஆஸ்திரேலிய பேட்டிங் முன்னால் எடுபடாமல் போனது ஆஸ்திரேலிய வீரர்களுக்கே ஆச்சரியகரமான விஷயம் என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்திருந்தார்.

எப்படியும் விறுவிறுப்பான (பழைய) பெர்த் டெஸ்ட் போட்டி ஒன்றை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x