

சென்னையில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜின்கயே ரஹானே, ரோஹித் சர்மா இருவரும் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.
இவர்கள் இருவருடன் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரும் உடன் வந்தார். இந்திய அணி வீரர்கள் அனைவரும் பயோ-பபுள் சூழலுக்குள் வைக்கப்பட உள்ளனர். மற்ற வீரர்களான கேப்டன் கோலி உள்ளிட்டோர் இன்று மாலைக்குள் சென்னை வந்தடைய உள்ளனர்.
இது தவிர இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மொயின் அலி ஆகியோர் ஏற்கெனவே சென்னை வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இலங்கையில் இருக்கும் இங்கிலாந்து அணியினர் இன்று மாலைக்குள் சென்னை வந்துவிடுவார்கள் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு அணி வீரர்களும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் தங்கி தங்களை 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வார்கள் அந்த நாட்களில் இவர்களுக்கு கரோனா பரிசோதனையும் நடத்தப்படும்.
பிப்ரவரி 2-ம் தேதி முதல் இரு அணி வீரர்களும் பயிறச்சியில் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.