

பாபா அபராஜித்தின் அரைசதம், ஷாருக்கானின் பொறுப்பான ஆட்டத்தால் அகமதாபாத்தில் நேற்று நடந்த முஷ்டாக் அலி டி20 கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் இமாச்சலப்பிரதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
முதலில் பேட் செய்த இமாச்சலப்பிரதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்சேர்த்தது. 136ரன்கள் சேர்த்்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழக அணி 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் அபராஜித், ஷாருக் கூட்டணி சேர்ந்து அணியை கட்டமைத்து, வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அபராஜித் 52 ரன்களுடனும், ஷாருக் 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
டாஸ்வென்ற தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தமிழக அணி வீரர்கள் சோனு யாதவ், சந்தீப் வாரியர் ஆகியோரின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் இமாச்சலப்பிரதேச அணி விக்ெகட்டுகளை இழந்தது.
அந்த அணியின் கேப்டன் ரிஷி தவண் அதிகபட்சமாக 35 ரன்களும், ராணா 28 ரன்களும், நிதின் சர்மா 26 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது. தமிழகம் தரப்பில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளையும், வாரியர் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
136ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. இமாச்சலப்பிரதேச வீரர் அரோரா பந்துவீச்சில், தொடக்கத்திலேயே ஜெகதீசன்(7), ஹரி நிசாந்த்(17) அருண் கார்த்திக்(0) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.
25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தமிழக அணி தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு சோனுயாதவ், அபராஜித் ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். சோனு யாதவ் 16 ரன்னில் ஜாஸ்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் தமிழக அணி தத்தளித்தது. 6-வது விக்கெட்டுக்கு பாபா அபராஜித்துடன், இணைந்த ஷாருக்கான் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இருவரும் நிதானமாகத் தொடங்கி அதன்பின் அடித்து ஆடத்தொடங்கினர். அதிரடியாக ஆடிய ஷாருக்கான் 19 பந்துகளில் 40 ரன்கள்(5பவுண்டரி, 2 சிக்ஸர்) குவி்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அபராஜித் 45 பந்துகளில் 52 ரன்கள்(3பவுண்டரி, 2சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பிஹார்-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் அரையிறுதியில் தமிழக அணி மோத உள்ளது.
முன்னதாக நேற்று காலை நடந்த முதலாவது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.