Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 04:41 PM
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது முதலில் வலைப்பயிற்சியில் பந்துவீசும் நபராகத்தான் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார். இடையில் அஸ்வினும், ஜடேஜாவும் காயமடைய 4-வது டெஸ்ட் போட்டியில் அவரைச் சேர்த்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டத்தில் கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்த வாஷிங்டன் சுந்தர், 4 விக்கெட்களை வீழ்த்தியதுடன் முதல் இன்னிங்ஸில் அரை சதமும் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஆஸ்திரேலியாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய வாஷிங்டன், சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தமாக தடம் பதித்ததற்கு காரணம் அவரது அப்பா எம்.சுந்தர். வாஷிங்டன் சுந்தரின் அப்பா சுந்தரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். உள்ளூர் போட்டிகளில் ஆடியுள்ள அவர், தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடச்செல்லும்போதெல்லாம் மகன் வாஷிங்டனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். போட்டியின்போது கிடைக்கும் இடைவேளைகளில் அவர் வாஷிங்டனுக்கு டென்னிஸ் பந்துகளை வீசி பேட்டிங் பயிற்சி அளித்துள்ளார். அந்த நேரத்தில் வாஷிங்டனின் ஸ்டைலை வைத்து, அவரால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என்று கணித்திருக்கிறார் சுந்தர். இதைத்தொடர்ந்து வாஷிங்டனை தீவிர கிரிக்கெட்டில் அவர் ஈடுபடுத்தியுள்ளார். பின்னர் சுந்தரின் நண்பரும் தமிழக அணியின் முன்னாள் பேட்ஸ்மேனுமான டபிள்யூ.வி.ராமனின் மேற்பார்வையில் வாஷிங்டனின் பேட்டிங் மெருகேற்றப்பட்டுள்ளது. பேட்டிங்கில் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சிலும் கெட்டிக்காரராக தற்போது உருவெடுத்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வெங்கட்ரமணாவின் பயிற்சியால் வாஷிங்டனின் சுழற்பந்து வீச்சில் மெருகு கூட, கிரிக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து 2016-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் தன் சிக்கனமான பந்து வீச்சாலும் பலரது கவனத்தை ஈர்த்தவர், பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சாதிக்க, இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!