

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரைக் காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர் வரும் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது.
ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு ரசிக்கர்களுக்கு அனுமதியில்லை என ஏற்கெனவே தமிழ்நாடு கிரி்க்கெட் வாரியம் அறிவித்துவிட்டது. இரு அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்கள் இன்றிதான் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்எஸ் ராமசாமி நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு,இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வீரர்கள் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசத்தையும் செய்து கொள்ள பிசிசிஐ விரும்பவில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டிப்பான தனிமைப்படுத்தும் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டு, பலசுற்று கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின் பயோ-பபுள் சூழலுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதலால் சென்னையில் நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்கள் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் நடக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆகமதாபாத்தில் உள்ள மொட்டீரா மைதானத்தில் நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அகமதாபாத்தில் நடக்கும் டி20 போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என பிசிசிஐ நிர்வாகி ஒருவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் ரசிகர்களை அனுமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எத்தனை ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் 50 சதவீதம் இடத்தை நிரப்பும் அளவுக்கு ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்படும்.
ஆனால், ரசிகர்களை அனுமதிப்பது என்பது அரசின் அனுமதியைப் பொறுத்து இருக்கிறது. புதிய விதிகள் இருந்தாலும், கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைபிடித்தாலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.