Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 04:41 PM
ஆரம்ப காலகட்டத்தில் வெறும் கைகளால்தான் டென்னிஸ் போட்டிகள் ஆடப்பட்டு வந்தன. ஒருசில வீரர்கள், கைகளில் கிளவுஸ்களை அணிந்து ஆடினர். பிற்காலத்தில் மரத்தால் ஆன டென்னிஸ் ராக்கெட்கள் உபயோகத்துக்கு வந்தன. இந்த டென்னிஸ் ராக்கெட்டின் வலை, மாடுகளின் குடலால் உருவான இழைகளை வைத்து பின்னப்பட்டிருந்தன.
1965-ம் ஆண்டில்தான் இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நைலான் இழைகளால் பின்னப்பட்ட டென்னிஸ் ராக்கெட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதன்பிறகு மரத்தாலான ராக்கெட்டுக்கு பதில் ஸ்டீலாலான ராக்கெட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் முதலில் ஸ்டீல் ராக்கெட்களை பயன்படுத்த தயங்கினர். அவற்றை பயன்படுத்தி துல்லியமாக ஆட முடியாது என்று அவர்கள் கருதியதே இதற்கு காரணம். 1965-களில் பயன்படுத்தப்பட்ட மரத்தாலான டென்னிஸ் ராக்கெட்டின் எடை சுமார் 350 கிராமாக இருந்தது. இந்த காலகட்டத்தில், ஸ்டீல் ராக்கெட்களைப் பயன்படுத்தியும் சிறப்பாக ஆடமுடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் ஜிம்மி கானர்ஸ். அவர் ஸ்டீல் பேட்டைப் பயன்படுத்தி, அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்க, மற்ற வீரர்களும் மர ராக்கெட்டுக்கு பதில் ஸ்டீல் ராக்கெட்களை பயன்படுத்தத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து அமெரிக்க டென்னிஸ் வீரரான ஜான் மெக்கன்ரோ, ‘கிராபைட்’ ராக்கெட்களை பிரபலப்படுத்தினார். தற்போது பயன்படுத்தப்படும் ராக்கெட்களின் எடை சுமார் 250 கிராமாக உள்ளது.
பெரும்பாலான டென்னிஸ் ராக்கெட்கள் ஆசிய கண்டத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஜப்பானில் அதிக அளவில் அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. டென்னிஸ் ராக்கெட்டின் நீளம் குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என்ற விதிகள் ஏதும் இல்லை. அதனால் வீரர்கள் தங்கள் வசதிக்கேற்ற ராக்கெட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!