Last Updated : 23 Jan, 2021 05:21 PM

 

Published : 23 Jan 2021 05:21 PM
Last Updated : 23 Jan 2021 05:21 PM

ரிச்சர்ட் ஹாட்லிக்குப் பின் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் புதிய மைல்கல்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முக்கிய மைல்கல்லை எட்டினார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளை 30 முறை வீழ்த்திய உலகிலேயே 2-வது வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஆன்டர்ஸன் பெற்றார். உலக அளவில் அதிகமான 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது வீரர் எனும் மைல்கல்லை எட்டினார்.

இலங்கையில் பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதில் இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஆன்டர்ஸன் 29 ஓவர்கள் வீசி 13 மெய்டன் எடுத்து 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை 30-வது முறையாக ஆன்டர்ஸன் கைப்பற்றினார். வேகப்பந்துவீச்சாளர்களில் ரிச்சர்ட் ஹாட்லிக்குப்பின், ஆன்டர்ஸன் 30-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஹாட்லி 36 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக 5 விக்கெட்டுகளை அதிகம் வீழ்த்திய வகையில் முத்தையா முரளிதரன் முதலிடத்தில்(67முறை) உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே 35 முறையும், மெக்ராத் 29 முறையும் வீழ்த்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஆன்டர்ஸன் வசம் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் 4-வது இடத்தில் ஆன்டர்ஸன் உள்ளார்.

முதலிடத்தில் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் (800) முதலிடத்திலும், ஷேன் வார்ன்(708) 2-வது இடத்திலும், அனில் கும்ப்ளே (610) 3-வது இடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x