விளையாட்டாய் சில கதைகள்: புச்சிபாபுவும் சென்னை கிரிக்கெட் வரலாறும்

விளையாட்டாய் சில கதைகள்: புச்சிபாபுவும் சென்னை கிரிக்கெட் வரலாறும்
Updated on
1 min read

சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்ததற்கும், புச்சிபாபுவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. புச்சிபாபுவின் முயற்சியால்தான் 1888-ம் ஆண்டில் சென்னையில் ’மெட்ராஸ் யுனைடட் கிரிக்கெட் கிளப்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆங்கிலேய அரசில் துபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) இருந்த மோதரவரப்பு தேரா வெங்கடசாமி என்ற செல்வந்தரின் பேரன்தான் புச்சிபாபு. சென்னையில் தங்கியிருந்த வெங்கடசாமி, பெரும் செல்வந்தராக இருந்தார். சிறுவயதில் தனது பேரன் புச்சிபாபுவை கவனித்துக்கொள்ள வெள்ளைக்கார பெண் ஒருவரை அவர் வேலைக்கு வைத்திருந்தார். தினமும் மாலை வேளைகளில் புச்சிபாபுவுக்கு விளையாட்டு காட்டுவதற்காக, அந்த பெண் வெளியில் அழைத்துச் செல்வார். அந்தப் பெண்ணுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால் வெள்ளைக்கார இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் இடத்துக்குத்தான் பெரும்பாலும் புச்சிபாபுவை அழைத்துச் செல்வார்.

இப்படி சிறுவயதில் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க, புச்சிபாபுவுக்கும் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தன் வீட்டுத் தோட்டத்தில், சகோதரர்களுடன் இணைந்து அவர் முதலில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். காலம் செல்ல செல்லச் புச்சிபாபுவோடு, அவரது கிரிக்கெட் ஆர்வமும் வளர்ந்தது. 1888-ம் ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, ‘மெட்ராஸ் யுனைடட் கிரிக்கெட் கிளப்’ (எம்யுசிசி) என்ற அமைப்பைத் தொடங்கிய புச்சிபாபு, தன் சொந்த பணத்திலேயே அந்த கிரிக்கெட் கிளப்புக்கான மைதானத்தையும் அமைத்துக் கொடுத்தார்.

எம்யுசிசி ஆரம்பிக்கப்பட்ட பிறகு, எஸ்ஐஏஏ, ஒய்எம்ஐஏ ஆங்கிலோ இந்தியன் அசோசியேஷன் போன்ற பல அமைப்புகள் தொடங்கப்பட்டன. அக்காலத்தில் வேட்டிதான் பிரதான உடை என்பதால், கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் இளைஞர்கள் மைதானம் வரை வேட்டியில் வந்து, அங்கு பேண்ட்டை அணிந்து போட்டிகளில் பங்கேற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in